Home நாடு தமிழ் இலக்கியக் காப்பகம்-ப.இராமு அறக்கட்டளை மரபுக்கவிதைத் தொகுப்பு

தமிழ் இலக்கியக் காப்பகம்-ப.இராமு அறக்கட்டளை மரபுக்கவிதைத் தொகுப்பு

751
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மறைந்த எழுத்தாளரும் கவிஞருமான ப.இராமுவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்குவேன் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ப.இராமுவின் “மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா” எனும் நூல் வெளியீட்டின்போது அறிவித்தார். அதற்காக 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் சரவணன் அறிவித்திருந்தார்.

அந்த அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மரபுக்கவிதைத் தொகுப்பு மற்றும் புதுக்கவிதைத் தொகுப்பு அறிமுக விழா கடந்த திங்கட்கிழமை (1 நவம்பர்) தலைநகர் மனிதவள மேம்பாட்டு நிதி அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சரவணன் கலந்து கொண்டு உரையாற்றி மரபுக் கவிதை-புதுக் கவிதை தொகுப்பு குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

தமிழ் இலக்கியக் காப்பகம்-ப.இராமு அறக்கட்டளை இணைந்து நடத்தும் மரபுக்கவிதைத் தொகுப்பு குறித்த அறிவிப்பு மரபுக் கவிதைப் படைப்பாளர்களுக்கு ஓர் இனிய செய்தியாக அமைந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

ஓர் எழுத்தாளன் தான் சொல்ல விரும்பும் கருத்துகளை நயமாக நறுக்கெனச் சொல்வதற்குப் பயன்படுத்தும் வலிமையான இலக்கிய வடிவம் கவிதைதான். வள்ளுவரும் இளங்கோவும் கம்பரும் பாரதியும் நீடித்த புகழோடு நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவர்கள் தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கிய தித்திக்கும் தீந்தமிழ்க் கவிதைகளின் மகத்துவம்தான்.

மலேசிய நாட்டில் நாடளாவிய நிலையில் பல கவிஞர்கள் இருக்கின்றார்கள். ஆற்றல்மிக்க அற்புதமான கவிஞர்களாகப் பெயர்போட்டவர்கள் சிலர்; பெயர் போடுகிறவர்கள் சிலர். கவிதை இலக்கியத்திற்கு உரமூட்டும் வகையில் பல இயக்கங்களும், இலக்கியக் குழுமங்களும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகத்தின் பயனால் பல படைப்பாளர்கள், தங்களது படைப்புகளை நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் முகநூல், புலனக் குழுக்கள் எனப் பல்வேறு தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பது மகிழ்ச்சியான தகவல்தான். எனினும், சில வேளைகளில் பல தரமான படைப்புகள் வெளிவராமலும் ஆவணப்படுத்தப்படாமலும் முடங்கிப்போகும் வருந்தத்தக்க சூழலும் ஏற்படத்தான் செய்கின்றது. கவிஞர்களின் பொருளாதாரச் சிக்கலும் வேறுபல சிக்கல்களும் இதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது.

இதற்கிடையில் மூப்பின் காரணமாக, நிறைவேறாத கனவுகளுடன் பல கவிஞர்களின் மறைவு நம் மனத்தைக் கனக்கச் செய்கிறது. இவற்றைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள மரபுக்கவிதை, புதுக்கவிதைப் படைப்பாளர்களின் கவிதைகளில் சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக்கும் முயற்சியைத்  தொடங்கவிருப்பதாக டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவித்தார்.

முதலில் மரபுக்கவிதைத் தொகுப்புக்கான வேலைகள் தொடங்கும். அதனைத் தொடர்ந்து புதுக்கவிதைக்கும் இதே போன்ற வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மேற்கண்ட நிகழ்ச்சி தொடர்பில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் சரவணன் குறிப்பிட்டார்.

எனவே, மரபுக்கவிதை எழுதும் கவிஞர்கள் தங்கள் படைப்புகளில் சிறந்த மூன்று கவிதைகளை அனுப்பி வைக்கலாம். அவற்றிலிருந்து தெரிவு செய்யப்படும் சிறந்த கவிதைகள் கவிஞர்களின் தன்குறிப்போடு ‘மரபுக் கவிதைத் தொகுப்பு’ நூலாக வெளியிடப்படும்.

அதுமட்டுமின்றி, நூல் வெளியீட்டு விழாவும் வெகு விமரிசையாக, இலக்கிய விழாவாக ஏற்பாடு செய்யப்படும். மாபெரும் வெளியீட்டு விழாவில் சில கவிஞர்கள் சிறப்புச் செய்யப்படுவார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய 2 பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்படும் கவிஞர்கள் சிறப்புச் செய்யப் படுவார்கள்.

ப.இராமுவின் அறக்கட்டளை வாயிலாக வெளியிடப்படும் இந்த நூல்களில் மரபுக்கவிதைத் தொகுப்பு ஒவ்வொரு வருடமும், ப.இராமுவின் நினைவு நாளான பிப்ரவரி 19ஆம் நாள் வெளியிடப்படும். புதுக்கவிதைத் தொகுப்பு ஆண்டு இறுதியில் வெளியிடப்படும்.

மரபுக் கவிதைக்குச் சிறந்த திட்டத்தைச் செயல்வடிவமாக்கிக் கவிஞர்களையும் அவர்தம் கவிதைகளையும் சிறப்பிக்க முனைந்துள்ள மனிதவள அமைச்சர் சரவணன் முயற்சிக்கு இலக்கியவாதிகள் சார்பிலும், எழுத்தாளர்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொகுப்பில் இடம்பெற விரும்பும் கவிஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :-

1. மலேசியர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

2. கவிஞர்கள் தாங்கள் விரும்பிய பாவகை, பாவினத்தில் எழுதலாம்.

3. கவிஞர்கள் தாங்கள் ஏற்கனவே எழுதிய அல்லது புதிதாக எழுதிய கவிதைகளை அனுப்பலாம். ஆனால் அச்சிடப்பட்டு, வெளியிடப்படாத கவிதைகளாக இருக்க வேண்டும்.

4. கவிஞர்கள் தங்களின் சுய விவரக்குறிப்பு, புகைப்படம் (முழுப்படம்/அரைப்படம்), முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

5. கவிதைகள் தனிமனிதச் சாடலாகவோ சமய, இன அவதூறாகவோ இருப்பின் நீக்கப்படும்.

6. ஒருவர் குறைந்தது 2 அல்லது 3 கவிதைகள் அனுப்பலாம்.

7. கவிதைகளைக் கீழ்க்கண்ட வழிகளில் எதிர்வரும் 30/11/2021-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி : No 58 Jalan Setiajaya
Damansara Heights
50490 Kuala Lumpur

மின்னஞ்சல் முகவரி : dewanbahasatamil@gmail.com
வாட்சாப் எண் : 010-2353926
கூகுள் பாரம் : https://forms.gle/EHiFpC1qrMea432D6

8. நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் மட்டுமே தொகுப்பில் இடம்பெறும்.

9. கவிதைகளில் தேவைக்குட்பட்ட திருத்தங்களைச் செய்வதற்குத் தேர்வுக்குழுவிற்கு முழு உரிமை உண்டு.

10. தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.

11. அனுப்பி வைக்கப்படும் கவிதைகளை மரபுக்கு உட்பட்ட திருத்தங்களோடு வெளியீடு செய்ய ஏற்பாட்டுக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.