சென்னை : சென்னையையும் சுற்று வட்டாரங்களையும் கடுமையான மழை ஒருபுறம் மிரட்டிக் கொண்டிருக்க, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் களமிறங்கி வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு அதற்கான நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.
சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர் ஒருவர் மழை காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார். கொட்டும் மழைக்கிடையே, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராஜேஸ்வரி என்ற காவல் ஆய்வாளர், தானே நேரடியாகக் களமிறங்கி உடல் நலம் குன்றிய அந்த இளைஞரைத் தோளில் சுமந்து சென்று ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காட்சி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்தப் போலீஸ் பெண்மணியின் மனிதநேயத்தைக் கண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
அந்தப் படக் காட்சிகளை ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டார்.
களத்தில் நின்ற பணியாளர்களை வைத்து மீட்பு நடவடிக்கையை ராஜேஸ்வரி செய்திருக்கலாம். ஆனால், அர்ப்பணிப்பு, பணி ஈடுபாடு காரணமாக அவரே களத்தில் இறங்கினார். அந்த இளைஞரைத் தோளில் தூக்கி சுமந்து சென்றார்.
அர்ப்பணிப்பு மிக்க சேவையால் மக்கள் உள்ளங்களை கவர்ந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
“எத்தனை இடர் வரினும் இருள் சூழினும் மனிதநேயம் எனும் மணிவிளக்கின் ஒளி அவற்றைப் போக்கி புது நம்பிக்கையை அளிக்கிறது! உதயா என்பவரின் உயிரைக் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் செயல் அத்தகைய ஒளியே! அவரை நேரில் அழைத்துப் பாராட்டினேன்” எனவும் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்யும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் கீழ்க்கோட்டையூரில் உள்ள சாலையோரத் தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அந்தப் படக் காட்சிகளும் பகிரப்பட்டு வருகின்றன.