மலாக்கா : தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றியிருப்பதைத் தொடர்ந்து அம்னோவின் சுலைமான் முகமட் அலி 13-வது முதலமைச்சராகப் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) அதிகாலையில் பதவியேற்றார்.
தேசிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்ட 55 வயதான டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி லெண்டு தொகுதியில் மீண்டும் 3,104 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
அவருக்கு மலாக்கா ஆளுநர் துன் முகமட் அலி ருஸ்தாம் தனது அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்,
அந்த நிகழ்ச்சியில் அம்னோ உதவித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி மசீச தலைவர் வீ கா சியோங், தேசிய முன்னணி ஆலோசனைக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு பக்காத்தான் ஹாரப்பான் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்றார் முகமட் அலி. இன்று அவர் இரண்டாவது முறையாக மலாக்கா முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
மலாக்கா மாநில ஆட்சிக் குழு நியமனங்கள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும். இந்தியர் பிரதிநிதியாக காடெக் தொகுதியில் வெற்றி பெற்ற வி.பி.சண்முகம் மஇகா சார்பில் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற தேசிய முன்னணி
28 தொகுதிகளைக் கொண்ட மலாக்கா சட்டமன்றத்திற்கான தேர்தலில் தேசிய முன்னணி 21 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.
பக்காத்தான் ஹாராப்பான் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 4 தொகுதிகளில் ஜசெக வெற்றி பெற்றிருக்கிறது. பக்காத்தானின் முன்னாள் மந்திரி பெசார் அட்லி சஹாரி அமானா சார்பில் ஒரே ஒரு தொகுதியில் – புக்கிட் கட்டில் தொகுதியில் – வெற்றி பெற்றிருக்கிறது.
ஆனால் 11 தொகுதிகளில் போட்டியிட்ட பிகேஆர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுமோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறது.