- வெங்கட்பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவின் வித்தியாச, அதிரடி பயணம்
வெங்கட்பிரபு இயக்கத்தில் வித்தியாசமான, உண்மையிலேயே இதுவரையில் தமிழ்த் திரையுலகம் கண்டிராத ஒரு கோணத்தில் உருவாகியிருக்கும் படம் இது.
படத்தின் திரைக்கதையை மிக நுணுக்கமாகச் செதுக்கி உருவாக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. திரைக்கதையில் கொஞ்சம் சறுக்கியிருந்தாலும், படம் “குழப்பம், புரியவில்லை, போர்” என சாதாரண இரசிகர்களின் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கக் கூடிய அபாயம் நிறைந்த கதை.
சமீப காலமாக, திரைப்படத் துறையில் ஒழுங்காக ஒத்துழைப்பு தராத நடிகர் எனப் பெயர் வாங்கியிருக்கும் சிம்பு என்ற சிலம்பரசனின் நற்பெயரையும், நடிப்பையும் ஒரு சேரத் தூக்கி நிறுத்தும் வண்ணம் உருவாகியிருக்கும் படம் “மாநாடு”.
வெங்கட் பிரபு, சிம்பு கூட்டணிக்கு சரியான ஈடு கொடுத்து, தன் நடிப்பால் படத்தை இன்னொரு உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. படத்தின் பின்பாதி முழுக்க சூர்யாவின் அட்டகாசமான, கலகலப்பூட்டும், நடிப்பால் திரையரங்கமே அதிர்கிறது. அவருக்கும் சிம்புவுக்கும் இடையிலான மோதல்கள் படத்தின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன.
கதை – திரைக்கதை
கோயம்புத்தூருக்கு துபாய் நகரிலிருந்து விமானத்தில் வருகிறார் அப்துல் காலிக் (சிம்பு). அவரின் இந்து நண்பன் ஈஸ்வர மூர்த்தி (பிரேம்ஜி). பிரேம்ஜியின் முஸ்லீம் காதலிக்கு நடக்கவிருக்கும் திருமணத்திற்குச் சென்று அங்கிருந்து அவரைக் கடத்திச் சென்று பிரேம்ஜிக்குத் பதிவுத் திருமணம் செய்து வைப்பது என்பது சிம்புவின் திட்டம். எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கும்போது, அவர்கள் பதிவுத் திருமணத்திற்கு செல்லும் வழியில் காரில் வந்து மோதுகிறான் ஒருவன். அந்த சம்பவத்தினால் போலீஸ் சிம்புவையும் நண்பர்களையும் வளைத்துப் பிடிக்கிறது.
இந்தக் கட்டத்தில் விமானப் பயணத்தில் இருக்கும் சிம்பு திடீரென கனவு கலைந்து எழுகிறார். ஆம்! அவருக்கு முன்கூட்டியே நடக்கவிருக்கும் சம்பவங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன.
ஓர் அரசியல் கட்சி மாநாடு, அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வகுக்கப்படும் திட்டம் – இவையெல்லாம் முன்கூட்டியே சிம்புவுக்கு கனவுகளாக வருகிறது.
நிஜ வாழ்க்கையில் அந்த சம்பவங்களை எப்படி மாற்றியமைக்கிறார் என்பதுதான் படம்.
தனுஷ்கோடி என்னும் போலீஸ் உயர் அதிகாரியாக வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் அதே போன்று சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் மன ஆற்றல் படத்தின் இடைவேளைக்குப் பிறகு கிடைத்து விடுகிறது.
பிறகென்ன? சிம்புவும், சூர்யாவும் ஒருவருக்கொருவர் போடும் திட்டங்களை முறியடிக்க அவர்களே மாற்றி மாற்றி வியூகம் வகுப்பதும், மோதிக் கொள்வதும் என கலகலப்பாக படம் நகர்கிறது.
பல இடங்களில், ஏன் படம் முழுக்க காதில் பூச்சுற்றல்தான்! என்றாலும், அதனை அழகாகக் குழப்பமில்லாமல், இரசிக்கும்படி, அந்தப் பூச்சூற்றலைக் கையாண்டிருப்பதற்கு வெங்கட்பிரபுவைப் பாராட்டலாம்.
படத்தின் பலம் – சிறப்பம்சங்கள்
படத்தின் ஒளிப்பதிவை, வித்தியாசமான கோணங்களால், காட்சியமைப்புகளால் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் ரிச்சர்ட் எம்.நாதன். குறிப்பாக விமானத்தின் உள்ளே நடக்கும் சம்பவங்கள் வித்தியாசமான கோணங்களில் படமாக்கப்பட்டிருக்கின்றன.
படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் படத் தொகுப்பாளர் பிரவீன் கேஎல். இறுதிவரை படம் விறுவிறுப்பாக நகர்கிறது. அடுக்கடுக்கான மாறுபட்ட காட்சிகளை குழப்பமின்றி தொகுத்திருக்கிறார் பிரவீன்.
கதாநாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு அதிக வேலையில்லை.
படத்தைத் தனது விறுவிறுப்பான பின்னணி இசையால் நகர்த்துகிறார் யுவன் ஷங்கர் ராஜா. பாடல்கள் அதிகம் இல்லாததால் படத்தின் விறுவிறுப்பை தனது பின்னணி இசையால் அதிகரிக்கச் செய்திருக்கிறார் யுவன்.
படத்தின் குறைகள் என்று பார்த்தால், சில இடங்களில் வரும் நீளமான சண்டைக் காட்சிகள் தேவையில்லாதவை. அவற்றை நீக்கியிருக்கலாம் அல்லது நீளத்தைக் குறைத்திருக்கலாம். காதல் பாடல்களே இல்லாமல் படத்தை எடுத்திருப்பவர்கள், சண்டைக் காட்சிகளையும் குறைத்திருக்கலாம்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன் ஆகியோரும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
இந்தியாவில் முஸ்லீம் சமூகத்தினர் எதிர்நோக்கும் அரசியல் ரீதியானப் பிரச்சனைகளின் அடிப்படையில் கதை நகர்கிறது. அவர்களின் சமூக ரீதியான சிரமங்களை ஆங்காங்கே காட்சிகளாகவும், வசனங்களாகவும் அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.
படம் பார்க்கத் திரையரங்கம் வருபவர்கள் படம் முடியும் இறுதிக் காட்சி வரை அமர்ந்திருப்பது நலம். அப்போதுதான் படம் முடிந்த பின்னர் காட்டப்படும் பல சுவையான படப்பிடிப்புக் காட்சிகளை இரசிக்கலாம்.
“மாநாடு” தாராளமாகப் போகலாம்!