Home நாடு தைப்பூசக் கட்டுப்பாடுகள் : இந்திய சமூகத்தின் அதிருப்தியை சரவணன் வெளிப்படுத்தினார்

தைப்பூசக் கட்டுப்பாடுகள் : இந்திய சமூகத்தின் அதிருப்தியை சரவணன் வெளிப்படுத்தினார்

667
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அரசாங்கம் தைப்பூசம் தொடர்பில் விதித்திருக்கும் கடுமையான நிபந்தனைகள் தொடர்பில் இந்திய சமுதாயம் பெரும் அதிருப்தியில் இருப்பதாக மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, பத்துமலை முருகன் திருத்தலத்திற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட சரவணன், ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக், ஶ்ரீ மகாமாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா ஆகியோருடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

பேரங்காடிகளைப் பொதுமக்களுக்கு திறந்து விடுவதிலும், பாசார் மாலாம் நடத்துவதற்கும் அனுமதி அளித்திருக்கும் அரசாங்கம் இந்துக்கள் ஆண்டுக்கொரு முறை கொண்டாடும் தைப்பூசத் திருநாளுக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்தது ஏன் என சரவணன் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

இந்திய சமூகம் இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றும் சரவணன் கூறினார். இந்திய சமூகத்தின் ஆதரவு தேவை எனக் கூறும் அரசாங்கம் இதுபோன்றக் கடுமையான நிபந்தனைகள் விதித்தால் எப்படி இந்திய சமூகத்தினர் ஆதரவு தருவார்கள் எனவும் கேள்வி தொடுத்தார்.

இந்த நிபந்தனைகள் எதிர்வரும் ஜனவரி 19-ஆம் தேதி வரையில்தான் அமுலில் இருக்கும் என்பதால், அதன்பின்னர் பொதுமக்கள் தாராளமாக காவடிகள் போன்ற நேர்த்திக் கடன்களை பத்துமலையில் செலுத்தலாம் என்றும் அதற்கு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் தேவையான வசதிகளைச் செய்து தரும் என்றும் சரவணன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் தவறாமல் காவடி எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் தானும் இம்முறை 19-ஆம் தேதிக்குப் பிறகு காவடி எடுக்க உத்தேசித்திருப்பதாக சரவணன் கூறினார்.

சரவணனின் தைப்பூச வாழ்த்து

இதற்கிடையில் தைப்பூசத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் முருகனை தரிசிப்போம்,  அருளைப் பெறுவோம் எனவும் சரவணன் தெரிவித்தார்.

“முருகனுக்கு உகந்த நாளான இன்று, சிவனுக்கும், குரு பகவானுக்கும் கூட சிறப்புடைய நாளாகும். பல சிறப்புக்கள் மிக்க தைப்பூச நாள் அன்று விரதம் இருந்தால் கேட்ட வரத்தை தந்தருள்வார் முருகன் என்பது நம்பிக்கை. ஆக வழிவழியாக இந்துக்கள் கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகிறது இன்றைய தைப்பூசம்” தனது செய்தியில் சரவணன் குறிப்பிட்டார்.

“தைப்பூசத் திருநாளன்று அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூடி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த வருடம் வீட்டிலிருந்தபடியே முருகனை வழிபடும் நிலை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள். அந்த  இறைவனின் அருளால் இந்த வருடம் கோவிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டு நம் வேண்டுதல்களை நிறைவேற்றும் நிலை உள்ளது. கொரோனா தொற்று முற்றிலும் அழியாத பட்சத்தில் சில நிபந்தனைகள், புதிய நடைமுறைகளுடன் கூடிய தைப்பூசத்திருநாளை நாம் அனுசரிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது” எனவும் குறிப்பிட்ட சரவணன், காவடிகள் எடுக்க முடியாவிட்டாலும் பக்தர்கள் பால் குடம் எடுத்து முருகனுக்கான தங்கள் காணிக்கையைச் செலுத்தலாம் எனவும் தெரிவித்தார்.

“நமது நன்மைக்காகத்தான் இந்த கட்டுப்பாடுகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தைப்பூசத்தினால் கொரோனா தொற்று அதிகமாகியது எனும் அவப்பெயர் நமக்கு வேண்டாம். கொரோனா இன்னும் ஒழியாமல், ஒமிக்ரோன் உருவில் வலம் வருவதால், இந்த புதிய நடைமுறைகளைக் கடைப்பிடித்துத் தைப்பூசத் திருநாளில் முருகப் பெருமானின் ஆசி பெறுவோம். நாம் மரியாதையான சமயம் மட்டுமல்ல, கட்டுப்பாடான சமயம் என்பதையும் இதன்வழி நிரூபிப்போம்” என்றும் சரவணன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.