Home நாடு ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 4 : மாஸ்லீ மாலிக் போட்டியிடும் லாயாங்-லாயாங்

ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 4 : மாஸ்லீ மாலிக் போட்டியிடும் லாயாங்-லாயாங்

795
0
SHARE
Ad

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் ஒன்றாக கவனிக்கப்படுகிறது லாயாங்-லாயாங்.  முன்னாள் கல்வி அமைச்சர் மாஸ்லீ மாலிக் பிகேஆர்-பக்காத்தான் கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். லாயாங்-லாயாங் தொகுதி உள்ளடங்கியிருக்கும் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத்தின் நடப்பு உறுப்பினரும் அவர்தான். பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்றால் – மாஸ்லீ மாலிக்கும் வெற்றி வாகை சூடினால், அவரே மந்திரி பெசார் என்ற ஆரூடத்தால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியிருக்கிறது லாயாங்-லாயாங். அந்தத் தொகுதியின் நிலவரங்கள் குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

மலேசியாவில் கல்வி அமைச்சராக இருந்தவர்கள் எப்போதுமே சர்ச்சையில் சிக்குவார்கள். பக்காத்தான் ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த மாஸ்லீ மாலேக்கும் இதற்கு விதிவிலக்கல்ல.

‘கறுப்பு நிற சப்பாத்து’ தொடங்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் அவர் தனது கல்வி அமைச்சர் பதவியை துறக்கநேர்ந்தது. எனினும் டான்ஸ்ரீ முஹிடின்
யாசின் நெருக்குதலால்தான் துன் மகாதீர் தன்னைப் பதவியில் இருந்து விலகச் சொன்னார் எனப் பகிரங்கமாக பதவி விலகி சில மாதங்களுக்குப் பின்னர் தெரிவித்தார் மாஸ்லீ!

#TamilSchoolmychoice

அதற்கேற்ப, பெர்சத்து உடைபட்டபோது, முஹிடின் யாசின் பக்கம் சாயாமல் சுயேச்சையாக செயல்பட்டார் மாஸ்லீ மாலிக்.

ஓர் இடைவெளிக்குப் பின்னர், பிகேஆர் கட்சியில் ஐக்கியமானார் மாஸ்லீ மாலிக். கொஞ்சம் காலம் மறக்கப்பட்டிருந்த மாஸ்லீ, ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் பிரபலமாக செய்திகளில் அடிபடத் தொடங்கியிருக்கிறார்.

ஜோகூர் தேர்தலில் அவர் லாயாங் –லாயாங் தொகுதியில் போட்டியிடுவதும் அதில் வெற்றி பெற்றால்– பக்காத்தானும் மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றினால் – மாஸ்லீதான் மந்திரி பெசார் வேட்பாளர் என்பதும்தான் அனைவரின் பார்வையும் இப்போது லாயாங்-லாயாங் தொகுதி பக்கம் திரும்பியிருப்பதற்கான காரணங்கள்.

அதனால், லாயாங்– லாயாங்கும் ஜோகூர் தேர்தலில் நட்சத்திரத் தொகுதியாக பிரபலமடைந்திருக்கிறது.

மாஸ்லீ மாலிக் பயன்படுத்தும் பிரச்சார வாகனம்

மாஸ்லீ மாலிக் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தொகுதி சிம்பாங் ரெங்கம். அந்தத் தொகுதியின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று லாயாங் –
லாயாங், மற்றொன்று மாச்சாப்.

மாஸ்லீ மாலேக் மந்திரி பெசார் வேட்பாளர் என பரவலாக ஆரூடங்கள் வெளிவந்தாலும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

தேர்தலுக்கு ஒருநாள் மட்டும் இடைவெளி இருப்பதால், இந்த நேரத்தில் இனியும் மந்திரி பெசார் வேட்பாளரை பக்காத்தான் அறிவிக்க வாய்ப்பில்லை.

நான்கு முனைப் போட்டியில் லாயாங்– லாயாங் தொகுதி

2018 பொதுத் தேர்தலில் லாயாங்– லாயாங் தொகுதி வாக்காளர் எண்ணிக்கை 19,842. இந்த முறை 25,147 ஆக உயர்ந்திருக்கிறது.

2018 ஆண்டுப் பொதுத் தேர்தலில் அம்னோ – தேசிய முன்னணி 364 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டுமே இங்கு வெற்றி பெற்றது.

இந்தத் தொகுதி சார்ந்துள்ள சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியிலும் மஸ்லீ மாலேக் வெற்றி பெற்றவர் என்பதால் லாயாங்– லாயாங் தொகுதியிலும்
அவரே வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் 54 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் அவர்களின் வாக்குகள் எந்தப் பக்கம் செல்லும் என்பதை வைத்துதான் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.

32 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 14 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்டது இந்தத் தொகுதி. வெற்றி வாய்ப்புக்கு அவர்களின் வாக்குகளும் முக்கியம்.

லாயாங் – லாயாங் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தேசிய முன்னணி சார்பில் அப்துல் முத்தலிப் பின் அப்துல் ரஹிம், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் அழகேந்திரன் கிருஷ்ணன், பெஜுவாங் கட்சி சார்பில் அகமட்
ஷாபிக் ஒத்மான் ஆகியோரும் இங்கு களமிறங்கியிருக்கின்றனர்.

2018 பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவிய இந்தத் தொகுதியில் பாஸ் 1,339 வாக்குகளைப் பெற்றது. இந்த முறை பெரிக்காத்தான் வேட்பாளராக இந்தியர் ஒருவர் போட்டியிடுவதால் மலாய் வாக்குகளை மற்ற மூன்று
வேட்பாளர்கள் மட்டுமே பிரித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியில் சீனர்களும் இந்தியர்களும் அதிக அளவில் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் வெற்றி வாய்ப்பு யார் பக்கம் என்பது நிர்ணயமாகும்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் மந்திரி பெசார் வேட்பாளர் மஸ்லீ மாலேக்தான் என்ற ஆரூடங்கள் நிலவுகின்றன.

அதேசமயம், சிம்பாங் ஜெராம் தொகுதியில் போட்டியிடும் அமானா கட்சியின் துணைத் தலைவர் சாலாஹூடின் அயோப் பக்காத்தானின் மற்றொரு மந்திரி பெசார்
வேட்பாளராகப் பார்க்கப்படுகிறார்.

கல்வி அமைச்சராக இருந்தவரை அரசியல் காற்று ஜோகூரின் அடுத்த மந்திரி பெசார் ஆக்குமா?

அல்லது சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறச் செய்வதோடு நின்றுவிடுமா?

அல்லது லாயாங்– லாயாங் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றி மஸ்லீ மாலேக்கை வீழ்த்திக் காட்டுமா?

முடிவு லாயாங்– லாயாங் தொகுதி வாக்காளர்கள் கரங்களில்!

-இரா.முத்தரசன்