Home நாடு ரபிசி ரம்லி வருகை பிகேஆர் கட்சியில் மாற்றம் ஏற்படுத்துமா?

ரபிசி ரம்லி வருகை பிகேஆர் கட்சியில் மாற்றம் ஏற்படுத்துமா?

698
0
SHARE
Ad
ரபிசி ரம்லி

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி முன்வந்திருப்பது கட்சிக்குள்ளும், வெளியேயும் பரவலான வரவேற்பையும், ஆதரவையும் பெற்றிருக்கிறது.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கட்சித் தேர்தலில் அப்போதைய துணைத் தலைவர் அஸ்மின் அலியிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் ரபிசி ரம்லி. அதன் பின்னர் அவர் மீதான வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றார்.

2018 பொதுத் தேர்தலில் அவர் மீதான வழக்குகள் – பெற்ற தண்டணையால் – நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட முடியவில்லை.

#TamilSchoolmychoice

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினராக 2013 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர் ரபிசி ரம்லி. அவர் போட்டியிடாததால் 2018 பொதுத் தேர்தலில் பாண்டான் தொகுதியில் வான் அசிசா வான் இஸ்மாயில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பிகேஆர் கட்சித் தேர்தலில் ரபிசி ரம்லியின் பிரபல்யத்திற்கு இணையான இன்னொரு தலைவரைப் பார்க்க முடியவில்லை. எனவே, அவர் மிக எளிதாக அந்தப் போட்டியில் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேறு சிலரும் துணைத் தலைவருக்கான போட்டியில் குதிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றனர். ஆனால் இறுதியில் ரபிசி ரம்லி போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவரின் வருகை பிகேஆர் கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. அன்வார் இப்ராகிமின் புதல்வி நூருல் இசாவும் அவரை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.

ரபிசி ரம்லி வெற்றி பெற்றால், தற்போது தொய்வடைந்து, சோர்வடைந்திருக்கும் பிகேஆர் கட்சியினர் உற்சாகமடைவார்கள். எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் மூலம் ரபிசி ரம்லி புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.

அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்திருக்கும் பிகேஆர் கட்சியினருக்கு இப்போதைக்கு கிடைத்திருக்கும் வரப் பிரசாதம் ரபிசி ரம்லியின் வரவு.