Home நாடு பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் கலைக்கல்வி மலாய்மொழியில் போதிக்கப்படுகிறதா?

பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் கலைக்கல்வி மலாய்மொழியில் போதிக்கப்படுகிறதா?

1097
0
SHARE
Ad
தமிழ்திறம்

கோலாலம்பூர் :இருமொழிப் பாடத்திட்டத்தை வேண்டாம் என்று போராடிக்கொண்டிருக்கின்ற சூழலில் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் இசுலாம் பாடத்தைக் கற்பிக்க வந்த ஆசிரியரைக் கொண்டு கலைக்கல்விப் பாடத்தை மலாய்மொழியில் கற்பிக்கப்படுவதாக மலேசியத் தமிழர் தேசியப் பேரவை கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சிக்கலைப் பற்றி மேலும் அறிய பூச்சோங் கின்ரார தமிழ்ப்பள்ளியின் தலைமையாசியரை மலேசியத் தமிழர் தேசியப் பேரவையினர் தொடர்புக்கொண்டு கேட்டபோது பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் மூன்றாம் ஆண்டின் ஒரு வகுப்பிற்கு இசுலாம் பாடம் போதிக்க வந்த மலாய் ஆசிரியரை மாவட்டக் கல்வித்துறையின் ஒப்புதலுடன் கலைக்கல்வியை மலாய்மொழியில் போதிக்க தலைமையாசிரியர் அணியம் செய்திருக்கிறார் என்று தெரிய வந்தது.

அதற்குத் தலைமையாசிரியர் கூறும் காரணம் கல்வி அமைச்சின் தர கலைத்திட்ட மதிப்பீட்டு ஆவணம் (DSKP) மலாய்மொழியில் தான் உள்ளதாகக் கூறுகிறார்.

#TamilSchoolmychoice

தலைமையாசிரியரின் இந்தப் பதில் குறித்துக் கருத்துரைத்த  பேரவையின் உதவித் தலைவர் திரு தமிழ்த்திறன் “பல துணைப் பாடங்களின் வழிகாட்டி ஆவணம் இன்னும் மலாய்மொழியில் இருப்பது ஒன்றும் புதிதல்ல. அவ்வாறு இருக்கும் ஆவணத்தை இதர பள்ளிகள் மொழிப்பெயர்த்து தான் பயன்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டார்.

எந்த அடிப்படையில் மாவட்ட கல்வித்துறை இதற்கு ஒப்புதல் அளித்தது என்று பெட்டாலிங் பெர்டானா மாவட்ட துணைக்கல்வி அதிகாரியைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது; ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் பள்ளி நிருவாகத்தின் முடிவுக்கு உட்பட்டு அவ்வாறு ஏற்பாடுச் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். இந்நிலைப்பாட்டை மலேசியக் கல்விக் கொள்கை இடமளிக்கிறதா என்று பேரவை வினவியபோது இடமளிப்பதாகவும், மாணவர்கள் ஆசிரியர் இல்லாமல் இருப்பதைவிட தேசிய மொழியான மலாய்மொழியில் கற்பித்தால் அதில் என்ன சிக்கல்? என்று பதிலளித்தார். பள்ளி தமிழ்ப்பள்ளி, பாட நூல் தமிழில் இருக்கிறது, வகுப்பு மதிப்பீடு அல்லது தேர்வு தமிழில் எழுத வேண்டும் என்ற சூழல் இருக்கும் போது மாணவர்களுக்குக் கலைக்கல்வியை மலாய்மொழியில் போதிப்பது எவ்வாறு ஏற்புடையதாக இருக்கும்? என்ற கேள்விக்குப் சம்பந்தப்பட்ட துணைக்கல்வி அதிகாரியிடம் பதில் இல்லை, பள்ளி நிருவாகமோ இரண்டு ஆண்டுகளாக கலைக்கல்விக்கு தேர்வு நடத்தப்படவில்லை என்றுக் கூறுகிறது.

இதுபோன்ற நிலைப்பாடுகளை மலேசியக் கல்விக்கொள்கை ஏற்கிறதா என்று சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையிடமும், மலேசியக் கல்வியமைச்சிடமும் விளக்கமும் கேட்டு பேரவை அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பும். அதோடு இதுபோன்ற தன்மூப்பாக செயல்படும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கையும் முன் வைக்கும்.

நாட்டில் இவ்வாறான சில தலைமையாசிரியர்களின் அலட்சியப் போக்கால் நலக்கல்வி, உடற்கல்வி, வரலாறு, இசைக்கல்வி போன்ற பாடங்களையும் மலாய்மொழியில் போதிக்கவும் மற்ற பள்ளிகளிலும் இவ்வாறு நடைமுறைபடுத்தவும் பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி தவறான வழிகாட்டியாக அமைய நேரிடும்.

பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்றால் தேவையான ஆசிரியர்களை மாவட்டக் கல்வித்துறையுடன் பள்ளி நிருவாகம் இணைந்துச் செயல்ப்பட்டு புதிய ஆசிரியர்களை கொண்டு வரும் பொறுப்பு தலைமையாசியர், மாவட்டக் கல்வித்துறையின் பொறுப்பு, அதைவிடுத்து பொறுப்பற்ற முறையில் இசுலாம் பாடம் கற்பிக்க வந்த ஒரு மலாய் ஆசிரியரை வைத்து மலாய் மொழியில் தமிழ்மொழியில் இருக்கும் பாடத்தை மலாய் மொழியில் படித்துத் தருவதல்ல. பலரின் எதிர்ப்பிற்குப் பிறகு சம்பத்தப்பட்ட இசுலாம் பாட ஆசிரியரை கலைக்கல்வியை மலாய் மொழியில் போதிப்பதிலிருந்து மீட்டுக்கொண்டிருப்பதாக பள்ளி நிருவாகம் முடிவெடுத்திருப்பதாக பேரவையிடம் தெரிவித்தது.

மாற்றத்திற்கான முடிவெடுக்கப்படிருந்தாலும் இனி வருங்காலங்களில் தமிழ்ப்பள்ளிகளின் தனித்தன்மையை காக்கும் முழுப்பொறுப்பு பள்ளியின் தலைமையாசிரியருக்குத்தான் உண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு கவனமாக செயல்பட வேண்டும்,

அதைவிடுத்து குமுகாயப் பொறுப்பின்றி நடந்துகொள்ள வேண்டாம் என்றும் இது போன்ற சிக்கல்களை வேறு பள்ளிகளில் எதிர் நோக்கியிருந்தால் tamilartesiyaperavai@gmail.com என்ற மின்னஞசலிலும் அல்லது 010-2136428 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு மலேசியத் தமிழர் தேசியப் பேரவைத் உதவித் தலைவர் திரு தமிழ்த்திறன் கேட்டுக்கொண்டார்.