புதுடில்லி : கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறார் என்ற வதந்திகளின் நாயகனாக உலா வந்தார் இந்தியாவின் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர்.
ஆனால் காங்கிரசில் சேரப் போவதில்லை என அறிவித்தார். இப்போது தனிக்கட்சி தொடங்கி நேரடி அரசியலில் ஈடுபடப் போவதாக தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் பிரசாந்த்.
ஐபேக் என்ற அரசியல் வியூக நிறுவனத்தைத் தொடங்கி பிரசாந்த் கிஷோர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
பாஜக 2014-இல் நரேந்திர மோடி தலைமையில் பொதுத் தேர்தலில் வெற்றிபெற பிரசாந்த் வியூகம் அமைத்துத் தந்தார். அதன் பின்னர் பல கட்சிகளுக்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வியூகம் வகுத்துத் தந்தார். அதில் பெரும்பாலான தேர்தல் முடிவுகள் பிரசாந்த் வகுத்துத் தந்த வியூகத்திற்கு ஏற்ப சாதகமாக அமைந்தன.
கடந்த ஆண்டு திமுகவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வியூக ஆலோசகராகச் செயல்பட்டார் பிரசாந்த். அதே நேரத்தில் மேற்கு வங்காளத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாகவும் வியூகம் அமைத்து வெற்றியைத் தேடித் தந்தார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் 2018ஆம் ஆண்டு இணைந்தார் பிரசாந்த். அடுத்த 2 ஆண்டுகளிலேயே 2020ஆம் ஆண்டு நிதிஷ் குமாரால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் கிஷோர் நேரடியாக அரசியல் களத்தில் குதிக்கும் விதமாக அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
“மக்கள் நலனுக்காக நான் மேற்கொண்ட கடந்த 10 ஆண்டுகால பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்த அனுபவமாக இருந்தது. தற்போது மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது, நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்கவுள்ளேன். பீகாரில் இருந்து தொடக்கம்” என பிரசாந்த் பதிவிட்டுள்ளார்.
பிரசாந்தின் சொந்த மாநிலம் பீகார் என்பது குறிப்பிடத்தக்கது.