கான்பெரா : ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்கோட் மோரிசன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் புதிய பிரதமராகப் பதவியேற்கிறார்.
அவரின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பென்னி வோங் என்ற பெண்மணி பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் திங்கட்கிழமை மே 23-ஆம் தேதி வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பென்னி வோங் சபா மாநிலத்தைச் சேர்ந்தவர். கோத்தா கினபாலுவில் பிறந்தவர். 8 வயதாக இருக்கும்போது 1976-இல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். அடிலேட் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை முடித்த பென்னி வோங், அரசியலில் ஈடுபட்டார். 2001-ஆம் ஆண்டில் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம் பெற்றார். ஆசிய நாடுகளில் இருந்து ஆஸ்திரேலிய அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் பென்னி வோங்தான். அப்போதைய பிரதமர் கெவின் ருட் அமைச்சரவையில் பென்னி வோங் பணியாற்றினார்.