புதுடில்லி : இந்தியாவின் நாடாளுமன்ற மேலவையான ராஜ்ய சபாவுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைப் பதிவிட்டார்.
இளையராஜாவுடன் சேர்த்து மொத்தல் நால்வர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் வி.விஜயேந்திர பிரசாத்தும் ஒருவர். பிரபல இயக்குநர் ராஜமௌலியின் தந்தையான இவர் பாகுபலி படங்களுக்கான கதை-திரைக்கதையை அமைத்தவர்.
ராஜமௌலி இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் கதை-திரைக்கதையையும் விஜயேந்திர பிரசாத் இணைந்து அமைத்திருந்தார்.
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்டேயும் ஒருவர்.
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட மற்றொருவர் பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா ஆவார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். உஷாவின் விளையாட்டு சாதனைகளை மோடி புகழ்ந்துரைத்தார்.
நியமிக்கப்பட்ட நால்வரும் நான்கு வெவ்வேறு தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.