Home நாடு மகாதீர் கூட்டணி : தேசிய முன்னணி-பக்காத்தான் – பெரிக்காத்தான் – யாருக்கு அதிக பாதிப்பு?

மகாதீர் கூட்டணி : தேசிய முன்னணி-பக்காத்தான் – பெரிக்காத்தான் – யாருக்கு அதிக பாதிப்பு?

551
0
SHARE
Ad

(கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய அரசியலை பரபரப்புடனும், திருப்பங்களுடனும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர் துன் மகாதீர். ஆகக் கடைசியாக கெராக்கான் தானா ஆயர் என்ற பெயரில் கூட்டணி ஒன்றை அமைத்திருக்கிறார்.  தான் தலைமை வகிக்கும் பெஜூவாங் கட்சியோடு, சில கட்சிகளையும் இந்தக் கூட்டணியில் இணைத்திருக்கிறார். இந்தக் கூட்டணியால் யாருக்கு பாதிப்பு அதிகம்? தேசிய முன்னணிக்கா? பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கா? பெரிக்காத்தான் நேஷனலுக்கா? விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

15-வது பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டிகள் நிகழும், மலாய் வாக்குகள் 3-ஆகப் பிளவுபடும் என்ற ஆரூடத்தைப் பொய்யாக்கி விட்டார் துன் மகாதீர்.

வழக்கம்போல், தனது ஆரம்ப கால அரசியல் நுழைவுக்கும், வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்த – பழமை வாய்ந்த – மலாய் இன சார்பு அரசியலை கையிலெடுத்திருக்கிறார். பெஜூவாங் தானா ஆயர் என்ற புதிய மலாய்-முஸ்லீம் கூட்டணியை அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் பல தொகுதிகளில் 4 முனைப் போட்டிகள் உருவாகக் களம் அமைத்திருக்கிறார்.

இதே மகாதீர்தான் 2018-இல் பல இன அரசியலை முன்னெடுத்தார். அதில் வெற்றியும் பெற்றார். அரசியல் எதிரியான அன்வார் இப்ராகிமிடம் கைகோத்தார். காலமெல்லாம் எதிர்த்து அரசியல் நடத்திய ஜசெகவுடன் இணைந்தார். ஆட்சியும் அமைத்தார்.

இப்போது அதிரடியாக, தலைகீழ் குட்டிக் கரணம் அடித்து மீண்டும் மலாய்-முஸ்லீம் கூட்டணி ஒன்றை அமைத்திருக்கிறார்.

நமக்கெல்லாம் பிடிக்கிறதோ இல்லையோ – அதுதான் மகாதீரின் தனித்துவம். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என இறுதிவரை சமாளிப்பார்.

சுமார் 120 தொகுதிகளில் போட்டியிடுவோம் என மகாதீர் தலைமையிலான கெராக்கான் தானா ஆயர் (Pejuang Tanah Air) கூட்டணி அறிவித்திருக்கிறது. அதன்படி பார்த்தால், சபா, சரவாக் மாநிலங்களில் களமிறங்காமல், மேற்கு மலேசியாவில் மட்டும் அவர்கள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

மேற்கு மலேசியாவில் மட்டும் உள்ள 166 நாடாளுமன்றத் தொகுதிகளில் சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளைத் தவிர்த்து விட்டு மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட – அல்லது கணிசமான விழுக்காட்டைக் கொண்ட – தொகுதிகளில் மட்டும் பெஜூவாங் தானா ஆயர் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்தான் 120 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவோம் என்ற கணக்கு!

அம்னோவுக்கு எதிராக – மாற்று அரசியல் சக்தியாகப் போட்டியிடுகிறோம் – என மகாதீர் அறிவித்திருந்தாலும், 4 முனைப் போட்டிகளால் பெரிக்காத்தான் நேஷனலுக்கும், பக்காத்தான் ஹாரப்பானுக்கும்தான் பாதிப்புகள் கண்டிப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

யாருக்கு பாதிப்பு அதிகம்?

மகாதீர் 2018 பொதுத்தேர்தலுக்காகத் தொடக்கிய கட்சி பெர்சாத்து. இப்போது அதன் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின், பெர்சாத்து இணைந்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கும் தலைமையேற்றுள்ளார்.

எனவே, பெஜூவாங் கூட்டணியால் முதல் பாதிப்பு பெர்சாத்து கட்சிக்குத்தான். மகாதீரின் ஆதரவாளர்கள் பெர்சாத்துவுக்கோ அது சார்ந்திருக்கும் பெரிக்காத்தானுக்கோ வாக்களிக்க மாட்டார்கள்.

பெஜூவாங் கட்சி சில தொகுதிகளில், குறிப்பாக கெடா மாநிலத் தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெறக் கூடும், மகாதீர் கெடா மாநிலத்துக்காரர் என்பதால்!

லங்காவி தீவு

பெஜூவாங் கூட்டணி வெற்றி வாய்ப்புள்ள ஒரே நாடாளுமன்றத் தொகுதி இன்றைய நிலையில் லங்காவி மட்டும்தான்! அதுவும் அங்கு மகாதீர் மீண்டும் போட்டியிட்டால்தான் அது சாத்தியம்! அவரின் மீதுள்ள மரியாதைக்காக – லங்காவிக்கு அவர் வழங்கியுள்ள சேவைகளுக்காக – அந்தத் தொகுதி மக்கள் மீண்டும் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும்.

பெஜூவாங் கூட்டணி போட்டியிடும் மற்ற தொகுதிகளில் பெர்சாத்துவுக்கு – பெரிக்காத்தான் கூட்டணிக்கு – கிடைக்கக் கூடிய வாக்குகள் கணிசமாக பிளவுபடும்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெஜூவாங் கட்சிக்குக் கிடைத்த மோசமான தோல்விகளை வைத்துப் பார்க்கும்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடும் தொகுதிகளில் சில நூறு வாக்குகளை மட்டுமே பெஜூவாங் கூட்டணி பெறும் என கணிக்கலாம். அந்தக் கூட்டணியில் இணைந்துள்ள மற்ற சிறிய கட்சிகளும் பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாக இல்லை.

எனவே, ஏற்கனவே, மிகவும் பின்னடைந்து இருக்கும் பெர்சாத்து கட்சியின் செல்வாக்கு மகாதீரின் வரவால் மேலும் பின்னடைவைச் சந்திக்கும்.

அம்னோவுக்குப் பாதிப்பா?

அம்னோவுக்கு மாற்று சக்தியாகக் களமிறங்குகிறோம் என மகாதீர் கூறினாலும், இந்த முறை மலாய் வாக்காளர்கள் அவரை நம்பி மீண்டும் வாக்களிக்கப் போவதில்லை. 22 மாத பக்காத்தான் ஆட்சியில் அவர் நிகழ்த்திய குளறுபடிகள் – மக்களின் நம்பிக்கையைச் சிதறடிக்கும் வண்ணம் அவர் திடீரென பதவி விலகியது – இப்படியாக பல அம்சங்களில் அவர் மீது மலாய் வாக்காளர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.

அந்த அதிருப்தி அலைகளில் பிரதிபலிப்புகள்தான் அம்னோவுக்கும், தேசிய முன்னணிக்கும் சாதகமான முறையில் கிடைத்து வரும் ஆதரவுகள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனவே, பெஜூவாங் கூட்டணி வரவால் அம்னோவுக்கு அதிக அளவில் பாதிப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது.

காரணம், தங்களுக்கிருந்த செல்வாக்கை அம்னோவும், அந்தக் கட்சி தலைமை தாங்கும் தேசிய முன்னணி கூட்டணியும் ஏற்கனவே ஓரளவுக்கு மீட்டுக் கொண்டு விட்டன.
அதன் பிரதிபலிப்புதான் மலாக்கா, ஜோகூர் மாநில தேர்தல் முடிவுகள்!

அந்த மாநிலத் தேர்தல்களுக்கு முன்பே, சில நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் தேசிய முன்னணியே வெற்றி பெற்றது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

அம்னோவின் இப்போதைய பிரச்சனை பெஜூவாங் அல்ல!

மாறாக மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் எல்சிஎல் எனப்படும் போர்க்கப்பல் ஊழல்தான் அம்னோவின் மிகப் பெரிய தலைவலி. 1எம்டிபி விவகாரங்களும், வழக்குகளும் முடிவு காண்பதற்குள்ளாகவே எல்சிஎல் விவகாரம் வெடித்திருக்கிறது.

ஊழல் தடுப்பு ஆணையமும் எல்சிஎல் குறித்த விசாரணை அறிக்கையை சட்டத்துறைத் தலைவரிடம் (அட்டர்னி ஜெனரல்) சமர்ப்பித்திருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த அம்னோ மீது மீண்டும் ஊழல் கறை படிந்துள்ளது. சில ‘பெரிய’ தலைகள் இந்த விவகாரத்தில் சிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் எவ்வாறு 1எம்டிபி விவகாரம் அம்னோவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்ததோ, அதுபோல, எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் எல்சிஎல் விவகாரம் உருவெடுக்கக் கூடும்!

இந்தப் பிரச்சனை தவிர, 15-வது பொதுத் தேர்தலில் நடப்பு பிரதமர் இஸ்மாயில் சாப்ரி ஒற்றுமையுடன் முன்னிருத்தப்படுவாரா?

நஜிப், சாஹிட் ஹாமிடி போட்டியிடாமல் பின்வாங்குவார்களா?

நாடாளுமன்ற வேட்பாளர்கள் தேர்வினால் அம்னோவில் பிளவுகள் ஏற்படுமா?

என்பது போன்ற பிரச்சனைகள்தான் அம்னோ-தேசிய முன்னணிக்கான வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படுத்தும்.

மாறாக, பெஜூவாங்கினால், அம்னோவுக்கு எதிராக மலாய் வாக்காளர்கள் மாறுவார்கள் என்ற கூற்றை ஏற்றுக் கொள்வது கடினம்.

அம்னோ தரப்பினர் அனைவரும் ஒற்றுமையாக ஒரே பிரதமர் வேட்பாளரை நிறுத்தி அவருக்குப் பின்னால் அணி திரண்டால் அவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பக்காத்தான் ஹாரப்பான் நிலைமை என்ன?

துன் மகாதீரின் மலாய்-முஸ்லீம் கூட்டணியை ஆதரிக்க மாட்டோம் என பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்து விட்டார்.

எனினும், ‘பெரிய கூரை’ கொண்ட கூட்டணி அமைத்தால்தான் – அதன்வழி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் – தேசிய முன்னணியை வீழ்த்த முடியும் என்ற கருத்து அரசியல் ஆய்வாளர்களால் அடிக்கடி பதிய வைக்கப்படுகிறது.

பல்வேறு காரணங்களால் அரசியல் பகைமை தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் இடையில் ஆழமாக வேரூன்றி விட்டது. இன்றைய நிலையில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் கூட்டணி உடன்பாடு சாத்தியம் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

15-வது பொதுத் தேர்தலில் பெஜூவாங் கூட்டணிக்கு, மிஞ்சி மிஞ்சிப் போனால் சில நூறு வாக்குகள் கிடைக்கலாம். ஆனால் அந்த சில நூறு வாக்குகள் பிளவினால்,

எந்தக் கட்சிக்கு – எந்தக் கூட்டணிக்கு – தோல்வி கிடைக்கும் என்பதுதான் சுவாரசியமான – இப்போதைக்கு யாருக்கும் விடை தெரியாத கேள்வி!

– இரா.முத்தரசன்