Home நாடு எஸ்ஆர்சி வழக்கு : நஜிப் நீதிமன்ற உரிமைகளை கேலிக் கூத்தாக்குகிறார் – வழக்கறிஞர் மன்றம் சாடல்

எஸ்ஆர்சி வழக்கு : நஜிப் நீதிமன்ற உரிமைகளை கேலிக் கூத்தாக்குகிறார் – வழக்கறிஞர் மன்றம் சாடல்

742
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் மேல்முறையீட்டு வழக்கில் நஜிப் துன் ரசாக் வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் நிறுவனங்களையும் மாற்றி, நீதிமன்ற உரிமைகளைத் தவறான முன்னுதாரணமாகப் பயன்படுத்துகிறார் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று விடுத்த அறிக்கையில் சாடியது.

அந்த மன்றத்தின் தலைவர் கேரன் சியா விடுத்த அறிக்கையில் வழக்கறிஞர்களை மாற்றும் உரிமை நஜிப்புக்கு உண்டு என்றாலும் ஏற்கனவே நீதிமன்றம் நிர்ணயித்த விசாரணைக்கானத் தேதிகளை புதிய வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். அவ்வாறு நீதிமன்ற விசாரணைகள் நடைபெறும் தேதிகளில் வழக்கை நடத்த முடியாது என்றால் அந்த வழக்கை வழக்கறிஞர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனது வழக்கறிஞர் நிறுவனமான சைட் இப்ராகிம் சுஃப்லான் டிஎச் லியூ அண்ட் பார்ட்னர்ஸ் (Zaid Ibrahim Suflan TH Liew & Partners) நிறுவனத்தை நஜிப் நீக்கி விட்டதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கை ஒத்தி வைக்க வழக்கறிஞர் ஹிஷாம் செய்து கொண்ட விண்ணப்பத்தையும் கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

#TamilSchoolmychoice

வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் போவதாக வழக்கறிஞர் ஹிஷாம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். எனினும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஹிஷாம் தொடர்ந்து நஜிப்பின் வழக்கறிஞராகச் செயல்படுவார் என தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் நஜிப்பின் மேல்முறையீட்டு வாதங்களைத் தன்னால் சமர்ப்பிக்க முடியாது என வழக்கறிஞர் ஹிஷாம் உறுதியாக மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தனது வாய்மொழி வாதங்களைச் சமர்ப்பிக்க நஜிப்பின் வழக்கறிஞருக்கு கூட்டரசு நீதிமன்றம் வாய்ப்பளித்திருக்கிறது.

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்  இந்த வழக்கில் நஜிப் மீது விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையை இரத்து செய்ய அவர் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ஊழல் வழக்கின் மேல்முறையீட்டில் சில முக்கிய மனுக்களை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

இது நஜிப்புக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு தனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக நஜிப் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

நஜிப் சமர்ப்பித்த புதிய ஆதாரங்களை ஏற்றுக் கொள்ளவும் கூட்டரசு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை அடுத்து 3 அல்லது 4 மாதங்களுக்கு இந்த மேல்முறையீட்டு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என நஜிப்பின் வழக்கறிஞர்கள் மனு ஒன்றைச் சமர்ப்பித்தனர். ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டியிருப்பதால் இந்த ஒத்திவைப்பு தேவை என நஜிப்பின் புதிய வழக்கறிஞர்கள் குழு மனு ஒன்றைச் சமர்ப்பித்தனர். அந்த மனுவையும் கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ஏற்கனவே, திட்டமிடப்பட்ட தேதிகளில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெறும் என்றும் எந்தவொரு ஒத்தி வைப்புக் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் கூட்டரசு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கும் நஜிப்புக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது என கூட்டரசு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.