Home நாடு 15-வது பொதுத் தேர்தல் எப்போது? மாமன்னரே முடிவு செய்வார்!

15-வது பொதுத் தேர்தல் எப்போது? மாமன்னரே முடிவு செய்வார்!

467
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வெள்ள அபாயங்களுக்கு மத்தியில் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் அதனை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவராக மாமன்னரே உருவெடுப்பார் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு (40) இன்படி நாடாளுமன்றத் தவணை முடிவுக்கு வருவதற்கு முன்னால் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் முடிவெடுத்தால், அதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மாமன்னரைச் சாரும்.

அதைத் தொடர்ந்து அத்தகைய அமைச்சரவை முடிவை நிராகரிக்கும் உரிமை மாமன்னருக்கு உண்டு. இருந்தாலும் அமைச்சரவை முடிவு மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டால் அவர் அதனை நிராகரிக்க முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது.

#TamilSchoolmychoice

ஆனால், அமைச்சரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தங்களின் அமைச்சர் பதவிகளை இழக்கும் வண்ணம் நாடாளுமன்றக் கலைப்புக்கு ஒப்புக் கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு மீண்டும் மலேசியர்களைத் தொற்றிக் கொண்டுள்ள நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி உள்ளிட்ட அம்னோவின் 5 மூத்த தலைவர்கள் இன்று மாலையில் ஒன்றுகூடி அடுத்த பொதுத் தேர்தலுக்கான சாத்தியத் தேதிகளை விவாதித்தனர்.

அதுகுறித்து அவர்கள் ஒருமித்த முடிவொன்றை எடுத்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் சந்திப்பை அடுத்து இன்று இரவில் நடைபெறும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்.

அம்னோ உச்சமன்றக் கூட்டத்திலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.