Home நாடு ஜார்ச் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022

ஜார்ச் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022

1269
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் : ஆண்டு தோறும் நடைபெறும் ஜார்ஜ் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022 இவ்வாண்டு ‘கட்டற்றதை வசப்படுத்தல்’ என்னும் கருப்பொருளுடன் 2022 ஜார்ச்டவுன் இலக்கிய விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

கருப்பொருளுக்கு ஏற்ப இயற்கையோடு மனித குலத்துக்கு உள்ள ஆழமான உறவை ஆராயும் முகமாக இவ்வாண்டு விழா அமைகின்றது. பினாங்கு, ஜார்ச்டவுனில் நவம்பர் 24 முதல் 27 வரை பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இவ்விழாவில் பதினெட்டு நாடுகளைச் சேர்ந்த 72 இலக்கிய ஆளுமைகள் கலந்து கொள்கிறார்கள்.

பௌலின் ஃபன் தலைமை பொறுப்பேற்றிருக்கும் இவ்விழாவின் நிர்வாகியாக திரு. இசுடின் ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் மலேசிய எழுத்துலகிலும் மொழிபெயர்ப்பு துறையிலும் நன்கு அறியப்பட்ட ஆளுமைகளாவர். இவ்வாண்டு முதல் முறையாக இணைக்கப்பட்டுள்ள தமிழ் அரங்குகளுக்கு எழுத்தாளர் ம. நவீனும் சீன மொழி பகுதிக்கு மலாயா பல்கலைக்கழக சீன இலக்கிய ஆய்வாளர் டாக்டர் ஃபுலோரன்ஸ் குவேக்கும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இலக்கிய உரைகள், கலந்துரையாடல்கள், புத்தக வெளியீடுகள், கண்காட்சிகள், பயிற்சி பட்டறைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் விழா சிறப்பிதழாக, முவாரா தொகுப்பு நூல் (Muara) விழாவில் வெளியீடு காண்கிறது.

தமிழ் நிகழ்ச்சிகள்

இவ்வாண்டு ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் ‘வல்லினம் இலக்கியக் குழு’வும் இணை இயக்கமாக இணைந்துள்ளதால் ஜார்ச் டவுனில் மட்டுமல்லாமல் சுங்கை கோப் மலைச்சாரலில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்யத்திலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளன.

தமிழ் விக்கி அறிமுக விழா

அருண் மகிழ்நன்

நவம்பர் 25 (வெள்ளிக்கிழமை) தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மாலை 5 மணிக்கு முதல் அங்கமாக ‘தமிழ் விக்கி’ அறிமுக விழா நடைபெறும். அருண் மகிழ்நன் அவர்களின் தலைமை உரைக்குப் பிறகு மலேசியாவைச் சேர்ந்த ஐந்து கல்வியாளர்களுடனான உரையாடல் இடம்பெறும். தமிழ் விக்கியின் மலேசியப் பகுதியின் தரம், அதன் அடைவு, கல்விச் சூழலில் அதன் பயன்பாடு என விரிவான உரையாடலை அ.பாண்டியன் வழிநடத்துவார்.

கேள்வி – பதில் அங்கமாக நடக்கும் இந்த அமர்வுக்குப் பிறகு, தமிழ் விக்கிக்குப் பங்களித்த எழுத்தாளர்கள் குறித்து மா. சண்முகசிவாவின் உரை இடம்பெறும். இறுதியாக எழுத்தாளர் ஜெயமோகனின் சிறப்புரை இடம்பெறும்.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள்

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளரான பி. கிருஷ்ணன் அவர்களின் ஷேக்ஸ்பியர் நாடக மொழிப்பெயர்ப்பு நூலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மூன்று காட்சிகள் அரங்கேற்றம் காணும்.

நவம்பர் 25 (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இந்த நாடகக் காட்சிகளை விஸ்வநாதன் அவர்கள் இயக்கியுள்ளார். மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் ஆதரவுடன் அரங்கேறும் இந்த நாடகத்தில் அக்கல்லூரி மாணவர்களே பாகமேற்று நடிக்கின்றனர். வழக்கறிஞர் பசுபதி அவர்களின் தலைமை உரையுடன் இந்த நாடகம் தொடங்கும். மேலும் பி. கிருஷ்ணன் மொழிப்பெயர்த்த ஷேக்ஸ்பியர் நாடக நூல்களின் வெளியீடும் இவ்வங்கத்தில் நடக்கும்.

பி. கிருஷ்ணன் அரங்கு

நவம்பர் 26 (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பி. கிருஷ்ணன் அரங்கு எழுத்தாளர் ஜெயமோகனின் தலைமை உரையுடன் தொடங்கும். தொடர்ந்து பி. கிருஷ்ணன் படைப்புலகம் நூலை எழுத்தாளர் ஜெயமோகன் வெளியீடு செய்வார்.

எழுத்தாளர்கள் லதா, அழகுநிலா, ஜி.எஸ்.எஸ்.வி நவின், அ.பாண்டியன், அரவின் குமார், அருண்மொழி நங்கை, கணேஷ் பாபு ஆகியோர் பங்கெடுக்கும் அரங்கை முனைவர் இளம்பூரணன் வழிநடத்துவார்.

ஜார்ஜ் டவுனில் தமிழ் நிகழ்ச்சிகள்

தமிழ் நிகழ்ச்சிக்கான இரண்டு அரங்குகளும் தமிழ் எழுத்தாளரின் நூல் வெளியீட்டுக்கான இரண்டு அரங்குகளும் இவ்வாண்டு ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் ஒதுக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 26, (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு லதா, கோ.புண்ணியவான், அ.பாண்டியன் ஆகியோர் பங்குபெறும் அரங்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரங்கை அரவின் குமார் வழிநடத்துவார். இவ்வரங்கு UAB கட்டடத்தில் நடைபெறும். மாலை 6.30க்கு பி. கிருஷ்ணன் அவர்களின் ஷேக்ஸ்பியர் நாடக நூல்கள் வெளியீடும் இதே அரங்கில் நடைபெறும். கணேஷ் பாபு இந்த அரங்கை வழிநடத்துவார். பி. கிருஷ்ணன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெறும்.

நவம்பர் 27, (ஞாயிற்றுக்கிழமை) காலை மணி 10-க்கு எழுத்தாளர் ஜெயமோகனுடனான உரையாடல் நிகழ்ச்சி மண்டபத்தில் (Digital Hall) இடம்பெறும். இந்த அங்கத்தை ம.நவீன் வழிநடத்துவார். தொடர்ந்து ஜெயமோகனின் ஆங்கில நூலான ‘Stories of the true’ தொகுப்பு வெளியீடு காணும். தர்மா இந்த அரங்கை வழிநடத்துவார்.

விழாவின் பிற அம்சங்கள்

கடந்த ஆண்டுகளைப் போலவே புகழ்பெற்ற ஜப்பானிய புத்தக விற்பனை மையமான, கினோகுனியா இவ்விழாவின் அதிகார நூல் விற்பனை மையமாக அமையவிருப்பதால், Kinokuniya பினாங்கு UAB கட்டிடத்தில் நவம்பர் 25 – 27 தன் புத்தகக் கடையைத் திறந்திருக்கும்.

நிகழ்ச்சிகளில் எழுத்துப் பட்டறைகளில் கலந்து கொள்ள விரும்போவோர் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கட்டணமின்றி கலந்து கொள்ளலாம்.

போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி

வெள்ளிக்கிழமை சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டும் பிரம்ம வித்யாரண்யம் அமைப்புத் தங்குவதற்கான வசதிகளையும் உணவு வசதிகளையும் ஏற்பாடு செய்கிறது.

மேலும் வெள்ளிக்கிழமை நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களுக்கு வல்லினம் பேருந்து வசதியைக் கோலாலம்பூரிலிருந்து ஏற்பாடு செய்கிறது.

கோலாலம்பூரில் இருந்து பேருந்தில் வர விரும்புபவர்கள் 0109033526 எண்ணில் சண்முகாவைத் தொடர்பு கொள்ளலாம்.

பேராக்கில் உள்ளவர்களுக்குப் பயணம் தொடர்பாக ஏதும் ஆலோசனகள் தேவைப்பட்டால் 019-5710013 என்ற எண்ணில் உத்ராபதி அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ஜொகூரில் உள்ளவர்களுக்குப் பயணம் தொடர்பாக ஏதும் ஆலோசனகள் தேவைப்பட்டால் 016-4861297 என்ற எண்ணில் குமரன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பிற அனைத்துக் கேள்விகளுக்கும் ம.நவீன் 016-3194522 அல்லது அ.பாண்டியன் 013-6696944 ஆகியோரை அணுகலாம்.