ஈப்போ : நடப்பு மந்திரி பெசார் அம்னோவின் சாரானி முகமட் மீண்டும் பேராக் மாநில மந்திரி பெசாராக பேராக் சுல்தானால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, கடந்த வாரம் எதிரும் புதிருமான மோதிக் கொண்ட தேசிய முன்னணி – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிகள் இணைந்து பேராக் மாநில அரசாங்கத்தை அமைக்கவிருக்கின்றன.
ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
15-வது பொதுத் தேர்தலோடு நடத்தப்பட்ட பேராக் சட்டமன்றத்திற்கான தேர்தலில் மொத்தமுள்ள 59 தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனித்து ஆட்சி அமைக்க இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல.
பக்காத்தான் ஹாரப்பான் 24 தொகுதிகளைக் கைப்பற்றியது. தேசிய முன்னணி 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்த இரண்டு கூட்டணிகளும் இணைந்தால் 33 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் என்பதால் அந்தப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கப்படுறது.
மாநில அரசாங்க ஆட்சி அமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மை 30 சட்டமன்றத் தொகுதிகளாகும்.
பகாங்கிலும் தேசிய முன்னணி – பக்காத்தான் கூட்டணி அரசாங்கம்
இதற்கிடையில் பகாங் மாநில அரசாங்கத்தையும் தேசிய முன்னணியும், பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியும் இணைந்து அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
15-வது பொதுத் தேர்தலுடன் நடத்தப்பட்ட பகாங் சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிகமானத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றியிருக்கிறது.
17 தொகுதிகளை பெரிக்காத்தான் கைப்பற்ற – 16 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றியிருக்கிறது. தேசிய முன்னணி – அம்னோவின் கோட்டையாகத் திகழ்ந்து வந்த பகாங்கில் முதன் முறையாக தேசிய முன்னணி தோல்வி கண்டிருக்கிறது.
பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதைத் தொடர்ந்து 42 சட்டமன்றங்களைக் கொண்ட பகாங் அரசாங்கத்தில் எந்தக் கூட்டணியுமே பெரும்பான்மை பெறவில்லை.
தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் வேட்பாளர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, தேசிய முன்னணியும் பக்காத்தானும் இணைந்தால் 24 சட்டமன்றத் தொகுதிகளை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும். பெரும்பான்மை மாநில அரசாங்கம் அமைக்க 21 சட்டமன்றத் தொகுதிகள் தேவை.