கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (நவம்பர் 23) இரவு உச்சமன்றக் கூட்டத்தை நடத்திய அம்னோ, பெரிக்காத்தான் நேஷனல் அல்லாத கூட்டணியை ஆதரிக்கப் போவதாக அறிவித்தது.
சுமார் 5 மணி நேரம் நீடித்த அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இன்று வியாழக்கிழமை காலை தேசிய முன்னணி உச்சமன்றம் மீண்டும் கூடி அம்னோவின் முடிவை மீண்டும் பரிசீலித்து, அதன் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அம்னோவின் அறிவிப்பு, பக்காத்தானுடன் கூட்டணி எனத் தெளிவாகத் தெரியவில்லை என்பதால், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் இணைவதற்கான சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் மாமன்னர் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் மலாய் ஆட்சியாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் மாமன்னர் ஒற்றுமை அரசாங்கத்திற்கான பிரதமரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பிரதமர் இன்று வியாழக்கிழமை மாலை அல்லது நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகைக்குப் பின்னர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.