கோலாலம்பூர் : ஒரு வழியாக 15-வதுப் பொதுத் தேர்தல் களேபரங்கள் நடந்து முடிந்து விட்டன. இனி கட்சிகள் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகி வருகின்றன.
இதற்கிடையில் அம்னோவின் கட்சித் தேர்தலும் அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.
டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மீண்டும் அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை எதிர்த்துப் போட்டியிடப் போகிறவர் என்ற கேள்வி அம்னோ வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது,
இது குறித்து இன்று திங்கட்கிழமை கைரியிடம் கேட்கப் பட்டபோது பொறுத்திருங்கள் எனக் கூறியிருக்கிறார்.
முன்னாள் பிரதமரும் நடப்பு அம்னோ உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியும் அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
சாஹிட் ஹாமிடி அம்னோ தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட அவருக்கு ஆதரவாக துணைத் தலைவர் பதவிக்கு தற்காப்பு அமைச்சரும் நடப்பு துணைத் தலைவருமான முகமட் ஹாசான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைரி தனித்துப் போட்டியிடுவாரா அல்லது மற்ற தலைவர்களுடன் இணைந்து ஓரணியாகப் போட்டியிடுவாரா என்பதையும் காண அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.