கோலாலம்பூர்: கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்பிரவரி 23-ஆம் தேதி மலேசியாவின் முதல் குறுஞ்செயலியாக கைப்பேசிகளிலும், இணைய ஊடகமாக, இணையத் தளத்திலும் அதிகாரபூர்வமாக உலா வரத் தொடங்கியது செல்லியல்.
முரசு குழுமத்தின் தலைவரும் கணினித் துறை நிபுணருமான முத்து நெடுமாறன் வடிவமைப்பில் செல்லியல் தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.
அனைத்துலக அளவில் கையடக்கக் கருவிகளில் மொழிகளுக்கான உள்ளீடுகளை வழங்கிய முன்னணி தொழில்நுட்ப நிபுணர் முத்து நெடுமாறன் ஆவார். செல்லினம் என்ற குறுஞ்செயலியின் உருவாக்குநரும் முத்து நெடுமாறன் ஆவார்.
சட்டத் துறை பட்டதாரியும் நீண்ட காலமாக மலேசியத் தமிழ் எழுத்துலகில் ஈடுபட்டு வருபவருமான இரா.முத்தரசன் செல்லியல் ஊடகத்தின் நிருவாக ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.
23 பிப்பிரவரி 2013-ஆம் நாள் தலைநகர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செல்லியல் தொடங்கி வைக்கப்பட்டது. எனினும் 2012-ஆம் ஆண்டு இறுதியிலேயே செல்லியல் தளம், சோதனை முறையில் கைப்பேசிகளிலும் இணையத் தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு சோதிக்கப்பட்டது.
வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியதைத் தொடர்ந்து மலேசியாவில் இணைய ஊடகங்களில் தமிழில் இயங்கும் முதல் – ஒரே – குறுஞ்செயலி என்ற பெருமையையும் சாதனையையும் செல்லியல் கண்டிருக்கிறது. இன்றுவரை தமிழ் ஊடகங்களில் கைப்பேசிகளுக்கான குறுஞ்செயலி வடிவில் இயங்கும் ஒரே தளம் செல்லியல்தான்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான செய்திகளையும், தகவல்களையும் வழங்கி இன்றைக்கு மலேசியாவின் முக்கியமாக தமிழ் களஞ்சியமாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக சமூக ஊடகங்களிலும் கடந்த 10 ஆண்டுகளில் செல்லியல் தீவிரமாக இயங்கி வந்திருக்கிறது.
உதாரணமாக, டுவிட்டர் தளத்தில் இதுவரையில் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகளை செல்லியல் பதிவு செய்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களின் முக்கிய அரசியல், சமூக நிகழ்ச்சிகள், செய்திகள், தகவல்களை செல்லியல் பதிவு செய்திருக்கிறது.