Home Photo News வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா

1620
0
SHARE
Ad

வல்லினம் – யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை – போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ் சிறுகதை போட்டி ஆகியவற்றுக்கான பரிசளிப்பு விழாவாக அது அமைந்தது.

இவ்விரு பதிப்பகங்களின் நிர்வாகி எழுத்தாளர் ம.நவீனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. எழுத்தாளர் கி. இளம்பூரணன் யாழ் சிறுகதை போட்டியின் கட்டமைப்பை விரிவாக விளக்கினார். கோலாலம்பூரில் உள்ள கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்தப் பரிசளிப்பு விழாவில் டத்தோஶ்ரீ ஆ.தெய்வீகன் தலைமை தாங்கியதுடன் முதல் மூன்று பரிசுகள் வென்ற இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பரிசுத்தொகையை அவர் தலைமை ஏற்றிருக்கும் கோ. சாரங்கபாணி அறவாரியம் மூலம் வழங்கினார்.

முதல் பரிசு பெற்ற மாணவி இலக்கியாவுக்கு யாழ் பதிப்பகம் மூலம் தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன் ஆயிரம் ரிங்கிட் ரொக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது பரிசு பெற்ற மாணவிகளான திவ்யாஷினி – கீர்த்தனாவுக்கு முறையே 750 ரிங்கிட் மற்றும் 500 ரிங்கிட் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. மேலும் ஏழு மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக முன்னூறு ரிங்கிட் வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய டத்தோஸ்ரீ தெய்வீகன் கோ. சாரங்கபாணி மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கு செய்த நன்மையை விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இனி ஆண்டு தோறும் யாழ் பதிப்பகம் ஏற்று நடத்தும் சிறுகதை போட்டிக்கான பரிசுத்தொகையை கோ. சாரங்கபாணி அறவாரியம் வழங்கும் என அறிவித்தார்.

நிகழ்ச்சியின் இரண்டாம் அங்கமாக வல்லினம் பதிப்பகம் நடத்திய ‘அக்கினி சுகுமார்’ அறிவியல் சிறுகதை போட்டிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னதாக எழுத்தாளர் டாக்டர் மா. சண்முகசிவா சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து அக்கினி சுகுமாரின் துணைவியார் எழுத்தாளர் பத்மினி ராஜமாணிக்கம் அறிவியல் புனைக்கதை போட்டிக்கு தானும் தன் குடும்பத்தினரும் ஆதரவு வழங்கிய நோக்கம் குறித்து பேசினார்.

அறிவியல் புனைக்கதை போட்டியில் முதல் பரிசான இரண்டாயிரம் ரிங்கிட்டை எழுத்தாளர் ராஜேஸ் ராமசாமியும் இரண்டாவது பரிசான ஆயிரத்து ஐந்நூறு ரிங்கிட்டை அரவின் குமாரும் வென்றனர். தயாஜி, கலைச்செல்வம், நவின் கணேசன் ஆகியோர் வென்றனர்.

மதியம் 2.00 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி மாலை 4.00 மணிக்கு நிறைவுற்றது. இளம் தலைமுறையினரின் திறனை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது.