Home நாடு எல்மினா விமான விபத்து – பகாங் மாநிலத்தில் சட்டமன்ற இடைத் தேர்தல்

எல்மினா விமான விபத்து – பகாங் மாநிலத்தில் சட்டமன்ற இடைத் தேர்தல்

283
0
SHARE
Ad
ஜோஹாரி ஹாருண்

கோலாலம்பூர் : நேற்று வியாழக்கிழமை எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜோஹாரி ஹாருணும் ஒருவராவார்.

பெந்தோங் அம்னோ தொகுதி தலைவருமான ஜோஹாரி பெலாங்காய் சட்டமன்ற உறுப்பினருமாவார்.

அவரின் அகால மரணத்தைத் தொடர்ந்து பெலாங்காய் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

#TamilSchoolmychoice

பெலாங்காய் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 15-வது பொதுத் தேர்தலில் ஜோஹாரி 4,048 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல், பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் மீண்டும் தேசிய முன்னணியே இங்கு போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல் ஒற்றுமை அரசாங்க அடிப்படையில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆதரவு வழங்கும்.

பெரிக்காத்தான் நேஷனல் எதிர்த்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் பெலாங்காய் ஒன்றாகும்.

2018 கணக்கெடுப்பின்படி இந்த சட்டமன்றத் தொகுதியில் 71 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களும், 20 விழுக்காட்டு சீன, 6 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர்.

மற்ற வாக்காளர்கள் 3 விழுக்காட்டினராக இருக்கின்றனர்.

எல்மினா விமான விபத்து

சுபாங் விமான நிலையத்தில் இறங்குவதற்கு இரண்டே நிமிடங்கள் இருக்கும் வேளையில் பீச்கிராப்ட் மாடல் 390 என்னும் சிறிய ரக விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.

அதிலிருந்த பகாங் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜோஹாரி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். விமானம் சாலையில் விழுந்ததில் வாகனங்களோடு மோதியதில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எல்லா வகையான உதவிகளும் செய்து தரப்படும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார்.