Home நாடு கெமாமான் இடைத் தேர்தல் : மக்கள் தேர்வு, முன்னாள் இராணுவத் தளபதியா? மந்திரி பெசாரா?

கெமாமான் இடைத் தேர்தல் : மக்கள் தேர்வு, முன்னாள் இராணுவத் தளபதியா? மந்திரி பெசாரா?

524
0
SHARE
Ad

கெமாமான் : எதிர்வரும் சனிக்கிழமை டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தல்  பிரச்சாரத்தில் நேற்று புதன்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் களமிறங்கினார்.

தேசிய முன்னணி வேட்பாளரான டான்ஸ்ரீ ராஜா முகமட் அஃபாண்டிக்கு ஆதரவாக அன்வார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இங்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஸ், திரெங்கானு மாநில மந்திரி பெசார் அகமட் சம்சூரி மொக்தாரை அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் அகமட் சம்சூரி பெரிக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஆகலாம் என கெமாமான் பிரச்சாரங்களின்போது பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கோடி காட்டியிருந்தார்.

#TamilSchoolmychoice

53 வயதான சம்சூரி பாஸ் கட்சியின் 3 உதவித் தலைவர்களில் ஒருவராவார். திரெங்கானு பாஸ் கட்சியின் துணை ஆணையருமாவார்.

இயந்திரவியல் துறையில் பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்ற சம்சூரி பாஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.

தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் அம்னோவின் வேட்பாளரான  டான்ஸ்ரீ ராஜா முகமட் அஃபாண்டி ராஜா முகமட் நூர் ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதியாவார். ராஜா முகமட் வெற்றி பெற்றால் அவர் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இல்லாமல் முக்கியப் பொறுப்புகளும் அவருக்கு வழங்கப்படும் என அன்வார் இப்ராகிம் தன் பிரச்சார உரையில் குறிப்பிட்டார்.

கெமாமான் வாக்காளர்கள் தங்கள் மாநில மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பார்களா – அல்லது நமது நாட்டுக்காக உழைத்த ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதிக்கு வாக்களிப்பார்களா?