Home நாடு மித்ரா மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படுகிறதா?

மித்ரா மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படுகிறதா?

359
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களைத் தொடர்ந்து, மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றப் பிரிவு மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

தற்போது மித்ரா பிரதமர் இலாகாவின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் செயல்பட்டு வருகிறார்.

அன்வாரின் அமைச்சரவை மாற்றத்தில் ரமணன் தொழில் முனைவோர், கூட்டுறவுக் கழக துணையமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை ஏற்கனவே வகித்து வந்த செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, ஒற்றுமைத் துறை அமைச்சுக்கான துணையமைச்சராக நியமனம் பெற்றார்.

#TamilSchoolmychoice

முன்பு நஜிப் பிரதமராக இருந்தபோது இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒன்றை உருவாக்கி அதற்கு தானே தலைமையேற்றார். அந்தக் குழுவின் கீழ் செடிக் என்ற இந்தியர் உருமாற்றப் பிரிவை உருவாக்கி அதையும் பிரதமர் இலாகாவிலேயே செயல்பட வைத்தார்.

2018-இல் பக்காத்தான் ஹாரப்பான் ஆட்சிக்கு வந்தபோது துன் மகாதீர் வேதமூர்த்தியை ஒற்றுமைத் துறை அமைச்சராக நியமித்து அவரின் கீழ் செடிக் நிர்வாகத்தைக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் செடிக் என்ற பெயரும் மித்ரா என மாற்றப்பட்டது.

பின்னர் முஹிடின் யாசின் பிரதமராக வந்தபோது மித்ரா பிரதமர் இலாகாவில் இருந்து ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டது.

முஹிடின் யாசின் ஆட்சிக் காலத்தில் மஇகா தொடர்ந்து வழங்கி வந்த நெருக்குதல்கள் காரணமாக, இஸ்மாயில் சாப்ரி பிரதமர் ஆனதும் பிரதமர் இலாகாவின் கீழ் மித்ரா மீண்டும் கொண்டுவரப்பட்டது.

2022 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் அன்வார் இப்ராகிம் டத்தோ ரமணனை மித்ரா தலைவராக நியமித்தார்.

மித்ரா ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் என்ற அறிவிப்பை பிரதமர் அன்வார் இப்ராகிமே வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.