Home நாடு மகாதீர் குடும்பம் முதன் முறையாக ஊழல் விசாரணையில் சிக்குகிறது

மகாதீர் குடும்பம் முதன் முறையாக ஊழல் விசாரணையில் சிக்குகிறது

549
0
SHARE
Ad
மிர்சான் மகாதீர்

புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் பிரதமரானது முதல் அவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் ஒருமுறை கூட ஊழல் புகார்கள் அதிகாரத்துவ முறையில் பாய்ந்ததில்லை.

அவரும் பல முறை என்னை விசாரியுங்கள் – நான் தயாராக இருக்கிறேன் – என சவால் விடுத்து வந்துள்ளார்.அவரின் குடும்ப உறுப்பினர்கள் அயல்நாடுகளில் பெருமளவில் சொத்துகளைக் குவித்திருப்பதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்திருக்கின்றன.

அன்வார், நஜிப் உள்ளிட்ட மற்ற பலரின் மீது ஊழல் புகார் சுமத்தி சிறைக்கு அனுப்பியவர் மகாதீர். இப்போது முதன் முறையாக அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

மகாதீரின் மூத்த மகன் மிர்சான் மகாதீரை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்திருக்கிறது. மிர்சான் மகாதீர் மீதான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதோடு, அடுத்த 30 நாட்களுக்குள் தன் சொத்து விவரங்களை அவர் அறிவிக்க வேண்டும் எனவும் ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

1990-ஆம் ஆண்டுகளில் மிர்சான் மகாதீர் மேற்கொண்ட வணிக நடவடிக்கைகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகிறது.

பல வாரங்களுக்கு முன்பே மிர்சானை ஊழல் தடுப்பு ஆணையம் அழைத்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. கடந்த  புதன்கிழமை (ஜனவரி 17) மிர்சானின் உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகளை பகிரங்கமாக எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து தன் குடும்பத்தினர் சிறைத் தண்டனை வழங்கப்படும் என மிரட்டப்படுவதாக மகாதீர் கூறியுள்ளார். இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டோரா பேப்பர்ஸ் என்னும் ஆவணங்களின் கசிவைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், அதே ஆவணக் கசிவில் பெயர் குறிப்பிட்டுள்ள மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்றும் மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்க சார்பு நிறுவனம் ஒன்றைக் கையகப்படுத்தி, அரசாங்கத்தின் தனியார் மயத் திட்டத்தில் பங்கு பெற்று – பின்னர் அந்த நிறுவனத்தை மற்றவர்களுக்கு விற்பனை செய்ததில் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை வருமானமாக மிர்சான் மகாதீர் பெற்றதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.