Home நாடு “ஜாபர் சாதிக்கை நான் சந்தித்ததே இல்லை” – டத்தோ மாலிக் பகிரங்க அறிவிப்பு

“ஜாபர் சாதிக்கை நான் சந்தித்ததே இல்லை” – டத்தோ மாலிக் பகிரங்க அறிவிப்பு

370
0
SHARE
Ad
டத்தோ அப்துல் மாலிக்

கோலாலம்பூர் : இந்தியாவில் கடந்த சில நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஜாபர் சாதிக் தொடர்பான  தொடர்பான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில்  சாதிக்கின் தலைவராக ஒரு மலேசியர் செயல்படுகிறார் என  இந்திய ஊடகங்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தன. சில ஊடகங்கள்  அந்த நபர் வணிகர் டத்தோ மாலிக் எனவும் பகிரங்கமாக பெயர் குறிப்பிட்டன.

இந்நிலையில் டத்தோ அப்துல் மாலிக் டஸ்திகர் என்ற அந்த வணிகர் இன்று புதன்கிழமை (மார்ச் 13) வெளியிட்ட ஒரு காணொலி செய்தியில் ஜாபர் சாதிக் சம்பந்தப்பட்ட செய்திகள் அவதூறானவை என்றும் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஜாபர் சாதிக் என்ற அந்த சினிமாப் படத் தயாரிப்பாளரை தான் சந்தித்தது கூட இல்லை எனவும் மாலிக் குறிப்பிட்டு இருக்கிறார்.

#TamilSchoolmychoice

“பலர், குறிப்பாக சினிமாத் துறையில் உள்ளவர்கள் தனது பெயரை அவதூறு செய்ய வேண்டும் என பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்” என்றும் மாலிக் குறிப்பிட்டார்.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பொரேஷன் என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அவர், இதன் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) தலைநகர் டாங் வாங்கி காவல் துறை தலைமையகத்தில் புகார் ஒன்றை செய்திருக்கிறார். அந்த புகாரின் நகலை இந்திய தூதரகத்திற்கும் அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.

இதற்கிடையில் இந்தியாவிலும் மலேசியாவிலும் உள்ள தனது வழக்கறிஞர்களுக்கு தன் மீது பரப்பப்பட்டு வரும் அவதூறான செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தான் பணித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் தமிழ் திரைப்படங்களை திரையீடு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் டத்தோ மாலிக், பல பிரபல நட்சத்திரங்களை மலேசியாவுக்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகளும் நடத்தி இருக்கிறார்.

இந்திய இணைய ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ஒரு மலேசியர் எனக் கூறியிருந்தார்.

இந்த செய்தி மலேசிய ஊடகங்களிலும் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மலேசியக் காவல் துறை தலைவர் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் (ஐஜிபி) டான்ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன், தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையமும் மற்ற சில அமுலாக்க இலாகாக்களும் கூட்டாக இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக அப்துல் மாலிக்கும் மேலும் சிலரும் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்குப் பின்னர் மாலிக் விடுதலை செய்யப்பட்டார்.

2000 கோடி ரூபாய் – மலேசிய மதிப்பில் 1.13 பில்லியன் ரிங்கிட் – போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் ஜாபர் சாதிக் சில நாட்களுக்கு முன்னர் இந்தியக் காவல் துறையால் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

அவர் திமுக பிரமுகருமாவார். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ஜாபரை தமிழக ஆளும் கட்சியான திமுக கட்சியிலிருந்து நீக்கியது.