Home நாடு ஜாபர் சாதிக் போதைப் பொருள் : மலேசியக் காவல் துறை விசாரிக்கிறது

ஜாபர் சாதிக் போதைப் பொருள் : மலேசியக் காவல் துறை விசாரிக்கிறது

253
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெரும்புள்ளி ஒரு மலேசியர் என்ற தகவல்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மலேசியக் காவல் துறை தலைவர் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் (ஐஜிபி) டான்ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன், தெரிவித்துள்ளார்.

“இதுவரை காவல்துறைக்கு இது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (என்சிஐடி) தரவுத்தளத்துடனான சோதனையில், சனிக்கிழமை (மார்ச் 9) இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தால் (என்சிபி) கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் பெயர்கள் இங்கு போதைப்பொருள் கடத்தலில் பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

“தற்போது, மலேசியக் காவல் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவுக்கும் இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கும் எந்த இருதரப்பு உறவும் இல்லை. எந்தவொரு தகவல் தொடர்பும் இன்டர்போல் மற்றும் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு முகமை (DEA-Drug Enforcement Agency) மூலம் நடத்தப்படுகிறது” என்று ரசாருதீன் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) கூறினார்.

#TamilSchoolmychoice

இந்திய இணைய ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ஒரு மலேசியர் எனக் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்தே மலேசியக் காவல் துறை விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கிறது.

ஜாபர் சாதிக் திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ஜாபரை தமிழக ஆளும் கட்சியான திமுக நீக்கியது.