Home Photo News மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் வரலாறு – ‘மெட்ராஸ் பேப்பர்’ தொடராக வெளியிடுகிறது

மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் வரலாறு – ‘மெட்ராஸ் பேப்பர்’ தொடராக வெளியிடுகிறது

513
0
SHARE
Ad

சென்னை : இணையம் வழி வெளிவரும் தமிழ் வார இதழான ‘மெட்ராஸ் பேப்பர்’, தமிழ்க் கணிமை முன்னோடியான மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் முழுமையான வரலாற்றை,  ஒரு தொடராக வெளியிடவிருக்கிறது. எதிர்வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி 100-வது இதழாக மலரும் ‘மெட்ராஸ் பேப்பர்’ ஊடகத்தில் இந்த வரலாற்றுத் தொடர் தொடங்குகிறது.

இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்த எழுத்தாளரான பா.இராகவன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவருகிறது ‘மெட்ராஸ் பேப்பர்’. தமிழ்நாட்டு விவகாரங்களை மட்டும் பேசாமல்; தமிழ் பேசும் மக்கள் எங்கெல்லாம் பரவி வசிக்கிறார்களோ, அத்தனைப் பிராந்தியங்களின் பிரச்னைகளையும் பேசுகிற ஊடகமாக இது செயல்படுகிறது.

“முத்து நெடுமாறன் கணித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவர். இன்றைக்கு ஆயிரக் கணக்கான தமிழ் எழுத்துருக்கள் (fonts) வந்திருக்கலாம். எல்லாம் தொடங்கி வேகமெடுக்க ஆரம்பித்த புள்ளி, முத்து நெடுமாறனின் முரசு அஞ்சல். இன்றைக்கு இணையம் வழியே தமிழில் உரையாடும் அத்தனை பேரின் கரங்களிலும் அவர் இருக்கிறார். அவர் உருவாக்கிய முரசு அஞ்சலோ, செல்லினமோ, தமிழ் சங்கம் எழுத்துருவோ, இணைமதியோ, இன்னொன்றோ இல்லாமல் நமக்கு ஒரு நாளும் விடிவதில்லை. மொழிச் சேவை என்பது எழுதி மட்டுமே செய்வதல்ல. எழுத வைத்துச் செய்வதும்தான்.”

#TamilSchoolmychoice

– என்று இந்தத் தொடரின் அறிமுகச் செய்தியில் ‘மெட்ராஸ் பேப்பர்’ கூறியிருந்தது. மேலும் கூறுகையில்:

“உங்களிடம் கம்ப்யூட்டர் இருக்கிறதா? அதில் தமிழில் எழுதுகிறீர்களா? என்றால் நீங்கள் முத்துவைத் தொட்டிருக்கிறீர்கள் என்று பொருள். உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருக்கிறதா? ஆப்பிளா? ஆண்டிராய்டா? எதுவானாலும் முத்து எப்போதும் உங்கள் உடன் இருக்கிறார் என்று பொருள். அந்த வகையில் ஸ்மார்ட் போன் தலைமுறைக்குத் தடையற்ற தமிழ் கிடைக்கக் காரணமாக இருந்தவர் / இருப்பவர், முத்து நெடுமாறன். மெட்ராஸ் பேப்பர் அவருடைய வாழ்க்கை வரலாறைத் தொடராக வெளியிடவிருக்கிறது. கோகிலா பாபு அதனை எழுதுகிறார்.

ஓர் எழுத்துருக் கலைஞனின் வாழ்வில் என்ன பெரிய சுவாரசியம் இருந்துவிட முடியும் என்று நினைப்பீர்களானால், அது பிழை. தனது வாழ்நாள் முழுதும் ஒரு மனிதன், தன் மொழியை அனைத்து விதமான நவீன பயன்பாட்டுச் சாதனங்களுக்குள்ளும் எடுத்துச் சென்று, பொருந்தச் செய்வதையே பணியாக மேற்கொள்வது அபூர்வம்.

மிகவும் மாறுபட்டதொரு வாசிப்பு அனுபவத்துக்குத் தயாராகுங்கள். மெட்ராஸ் பேப்பர் 100-வது இதழில் இருந்து (ஏப்ரல் 17, 2024) இந்தத் தொடர் ஆரம்பமாகிறது.”

மெட்ராஸ் பேப்பர் ஊடகத்தின் இணையத் தொடர்பு :

https://www.madraspaper.com/

மெட்ராஸ் பேப்பர் ஊடகத்திற்கான சந்தா விவரங்கள்:

https://www.madraspaper.com/subscription/