சிங்கப்பூர் : சிங்கப்பூரில் குற்றச் செயல்கள் நடைபெறுவது மிகவும் அபூர்வம். அப்படியே நடந்தாலும் சிங்கப்பூர் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தேடிக் கண்டு பிடித்து விடுவார்கள். அதற்கு உதாரணம், அண்மையில் சிங்கப்பூரில் கும்பலாக ஆயுதம் தாங்கிய கொள்ளையில் ஈடுபட்ட 2 மலேசியர்களை சிங்கப்பூர் காவல் துறை, மலேசியக் காவல் துறை உதவியுடன் தேடிக் கண்டுபிடித்து கடந்த மே 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தியதுதான்!
கோ பூன் தோங் (28) – முகமட் தவுபிக் அகமட் பவுசி (32) என்ற அந்த இரு மலேசியர்களும் பாராங் கத்திகளுடனும், பேஸ்பால் விளையாட்டு மட்டைகளுடனும் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி சிங்கப்பூரிலுள்ள ஓர் இல்லத்தில் புகுந்து அங்கிருந்த 11 பேர்களிடம் ரொக்கமாகவும், பொருட்களாகவும் 4.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பொருட்களைக் கொள்ளையடித்தனர். அதிகாலை 2.00 மணியளவில் மேலும் மூவர் அல்லது அதற்கும் கூடுதலான நபர்களுடன் சேர்ந்து அவர்கள் அந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
29 வயது மாது ஒருவரிடம் இருந்து 3.9 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்புடைய பல்வேறு நாடுகளின் நாணயங்களைக் கொண்ட ரொக்கத்தையும் அவர்கள் கொள்ளையடித்தனர்.
மற்றொரு நபரிடம் இருந்து 320,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புடைய கைக்கெடிகாரத்தையும், 400 டாலர் மதிப்புடைய பெராரி கார் சாவியையும் அவர்கள் கொள்ளையிட்டனர்.
அதன் பின்னர் மலேசியாவுக்குத் தப்பிச் சென்று விட்டனர். மலேசியக் காவல் துறையின் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் மலேசியக் காவல்துறையும், சிங்கப்பூர் காவல் துறையும் இணைந்து ஈடுபட்டிருக்கின்றனர்.