Home அரசியல் இஸ்லாமிய ஹூடுட் கொள்கை உங்கள் நிலையை தெளிவுபடுத்துங்கள்- அன்வாருக்கு கர்ப்பால் வேண்டுகோள்

இஸ்லாமிய ஹூடுட் கொள்கை உங்கள் நிலையை தெளிவுபடுத்துங்கள்- அன்வாருக்கு கர்ப்பால் வேண்டுகோள்

510
0
SHARE
Ad

Karpal Singhஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 27- ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் இன்று பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராஹிமிடம் பாஸ் கட்சியின் இஸ்லாமிய கொள்கை பற்றி பிகேஆர் கட்சியின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டை வெளியிடும்படி கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

பிகேஆரின் கொள்கை விளக்க அறிக்கையில் ஹூடுட் சட்டம் மற்றும் இஸ்லாமிய மாநிலம் பற்றி ஏதும் குறிப்பிடாத நிலையில், இப் பிரச்சினையை தேர்தல் பிரச்சாரத்தின் போது எழுப்பியுள்ள  அப்துல் ஹடி அவாங் உட்பட பாஸ் கட்சித் தலைவர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த கர்ப்பால், இதுவரை அன்வார் மற்றும் கட்சியினர் இதற்கு ஏன்  பதிலளிக்கவில்லை என்று தமக்குப் புரியவில்லை என்று  கூறினார்.

தன்னால் ஜசெக கட்சி சார்பாக மட்டுமே பேசமுடியும் என்று தெரிவித்த கர்ப்பால், ஒவ்வொரு நாளும் பாஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களின் அறிக்கைகள் வந்தவண்ணம் உள்ள நிலையில், அன்வார் இப்பிரச்சனை பற்றிய தனது நிலைபாட்டையும், கட்சியினரின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியே ஆக வேண்டும் என்று மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என்று கர்ப்பால் சிங் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஹுடுட் நாட்டிற்குத் தேவையில்லை 

இதற்கிடையே ஹுடுட் மற்றும் இஸ்லாமிய சட்டத்தை ஜசெக ஆதரிக்கவில்லை அதே நேரத்தில் எதிர்க்கவுமில்லை என்ற ஹடியின் தகவல் தம்மை அதிர்ச்சியடையச் செய்ததாக கர்ப்பால் கூறினார்.

தாங்கள் ஆதரிக்கவில்லை என்றால் அச்சட்டத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தான் பொருள்படும் என்றவர், மீண்டும் ஜசெகவைப் பொறுத்தவரை ஹுடுட் நாட்டிற்குத் தேவையில்லாத சட்டம் என்று வலியுறுத்திக் கூறினார்.

மேலும் இவையிரண்டும் தேவையில்லை என்பதே ஜசெகவின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு என்றும் மீண்டும் கர்ப்பால் தெளிவுபடுத்தினார்.

லிம் மற்றும் அவரது மகன் இச்சட்டம் பற்றி அமைதி காத்ததால் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று மசிச-வால் கிளப்பிவிடப்பட்ட பிரச்சினை என்றவர், இச்சட்டங்களை எதிர்ப்பது தனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் மாறாக அது ஜசெக வின் முடிவு என்று கூறினார்.

ஹுடுட் சட்டம் மற்றும் இஸ்லாமிய கொள்கைகளின் அமலாக்கம்

ஹடி மட்டுமன்றி மற்ற பாஸ் தலைவர்களும் பிகேஆர் வெற்றி பெற்றால் மீண்டும் ஹுடுட் சட்டம் மற்றும் இஸ்லாமிய கொள்கைகளை தாங்கள் அமல்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு கருத்துரைத்த கர்ப்பால், தேசியமுன்னணி இவ்விஷயத்தை தவறாக கையாள்கிறதென்றும், இப்பிரச்சினைக்கு பாஸ் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும்  பிகேஆர் இவ்விரு சட்டங்களுக்கும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றும் இக்கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுமே பொதுவான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் பாஸ் கட்சியும் செய்யவேண்டும் என்று தனது அபிப்ராயத்தைத் தெரிவித்தார்.

மலாய் வாக்குகளைப் பெற பிகேஆர் மற்றும் ஜசெக இஸ்லாமியக்கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,இதற்கெல்லாம் ஜசெக தலைவணங்காது என்று கர்ப்பால் தெரிவித்தார்.

மேலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் இஸ்லாமிய மாநில சட்டத்திருத்தத்தை கொண்டுவரமுடியாது என்றும், ஜசெகவைப் பொறுத்தவரை தங்கள் நிலைப்பாடு என்றும் தெளிவானது –அது ஹுடுட் சட்டத்தையும் இஸ்லாமிய மாநிலத்தையும் ஒருபோதும் ஏற்காது என்றார்.