Home உலகம் அமெரிக்காவில் ‘வாழை’ படம் பார்த்த ஸ்டாலின்!

அமெரிக்காவில் ‘வாழை’ படம் பார்த்த ஸ்டாலின்!

524
0
SHARE
Ad

சான்பிரான்சிஸ்கோ – முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘வாழை’ திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்தார். படம் சிறப்பாக இருந்ததாக தன் பாராட்டுகளையும் இயக்குநர் மாரி செல்வராஜூவுக்கு தன் முகநூல் பக்கத்தின் மூலம் ஸ்டாலின் தெரிவித்தார்.

“உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி திரு. மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் திரு. மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!” என தன் முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டார்.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கத் தொழிலதிபர்களைத் தொடர்ந்து சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் ஸ்டாலின்.

#TamilSchoolmychoice

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஓஹ்மியம்’ என்ற நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்றும் இதன் மூலம் 500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற தகவலையும் ஸ்டாலின் வெளியிட்டார்.

தானியங்கி மூலம் இயங்கும் கார் ஒன்றில் அமர்ந்து கொண்டு அமெரிக்காவில் பயணம் செய்யும் காணொலியையும் ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

அந்தக் காணொலி பதிவுடன் கீழ்க்காணும் தந்தை பெரியாரின் வாசகத்தையும் ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்:

         இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை!

– தந்தை பெரியார் (இனி வரும் உலகம்)