கோலாலம்பூர், மே 14 – தேசிய காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் ஓமாருக்குப் பதிலாக, துணை காவல்துறைத் தலைவராக செயல்பட்டு வந்த டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் (படம்) தலைவராக பதவி ஏற்கிறார்.
அதோடு புக்கிட் அமான் புலன் விசாரணைப் பிரிவின் இயக்குனராக செயல்பட்டு வந்த டத்தோஸ்ரீ முகமட் பக்ரி சினின் துணைத் தலைவராகப் பதவி ஏற்கிறார் என்ற அறிவிப்பை பிரதமர் துறை இன்று வெளியிட்டுள்ளது.
சிரம்பான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 55 வயதான காலிட் கடந்த 1976 ஆம் ஆண்டு காவல்துறையில் இன்ஸ்பெக்டர் ஆக பயிற்சியில் சேர்ந்தார். பின் 1997 ஆம் ஆண்டு கெடா மாநில போதை ஒழிப்புப் பிரிவின் தலைவராக 6 வருடங்கள் பதவி வகித்த காலிட், பிறகு குவாந்தான் காவல்துறைத் தலைவராக பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவராகவும், இறுதியாக தேசிய காவல்துறைத் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல், 59 வயதான முகமட் பக்ரி 1975 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். கோத்தா கினபாலு, சிரம்பான், கூதட், சண்டாக்கான், லகாட் டத்து, செராஸ், டாங் வாங்கி ஆகிய பகுதிகளில் காவல்துறைத் தலைவராகப் பதவி வகித்து வந்த பக்ரி, இறுதியாக 2008 ஆம் ஆண்டு புக்கிட் அம்மான் புலனாய்வுத் துறை இயக்குனராகப் பொறுப்பேற்றார்.