Home நாடு போலீஸ் எச்சரிக்கையையும் மீறி பினாங்கில் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக 60 ஆயிரம் பேர் குழுமினர்

போலீஸ் எச்சரிக்கையையும் மீறி பினாங்கில் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக 60 ஆயிரம் பேர் குழுமினர்

647
0
SHARE
Ad

Anwar Ibrahimமே 19 – பினாங்கில் “எஸ்பிலனேட்” என்ற இடத்தில் மக்கள் கூட்டணி மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் – இது சட்டவிரோதக் கூட்டம் என்ற போலீஸ் எச்சரிக்கையையும் மீறி – சுமார் 60ஆயிரம் பேர் திரண்டனர்.

#TamilSchoolmychoice

கறுப்புப் பேரணி 505 தொடர் வரிசைக் கூட்டம் போல் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து, மக்கள் கூட்டணி தொடர்ந்து கூறி வரும் பொதுத் தேர்தல் முறைகேடுகளை – வாக்குகள் வாங்கப்பட்ட நடைமுறைகளை – கண்டனம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டனர்.

வழக்கம் போல், வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் இளைய சமுதாயத்தினராவர்.

அன்வார் இப்ராகிம் உரை

கூட்டத்தில் இறுதியாக உரையாற்றிய அன்வார் இப்ராகிம், பிரதமர் நஜிப் மக்கள் கூட்டணிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், காரணம் மற்ற நாடுகளில் இம்மாதிரி தேர்தல் முறைகேடுகள் நடந்திருந்தால் இந்நேரம் பொதுமக்கள் கூடி மாபெரும் கண்டனப் பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருப்பர், ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை என்று கூறினார்.

எங்களின் எதிர்ப்புப் பேரணிகளில் நாங்கள் அமைதியை நிலைநாட்டி வருகின்றோம் என்றும் அன்வார் இப்ராகிம் கூறினார்.  

“பினாங்கு, பேராக், ஜோகூர், நெகிரி செம்பிலான், பகாங் போன்ற மாநிலங்களில் நாங்கள் இதுவரை ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிய கூட்டங்களை நடத்தியிருக்கின்றோம். ஆனால், அவை எல்லாம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்தன. ஆனால், உள்துறை அமைச்சர் சாஹிட்டோ, இவை சட்டவிரோதக் கூட்டங்கள் என்று கூறி வருகின்றார். அவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த கூட்டங்களை நீங்கள் சட்டவிரோதம் என்று கூறலாம். ஆனால், மக்களின் சக்தியை உங்களால் நிறுத்த முடியாது. மக்களின் குரலே மகத்தானது” என்றும் அன்வார் தனது உரையில் முழங்கினார்.

“முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சிலர் கூறுகின்றனர். ஏமாற்றியதையும், கொள்ளையிட்டதையும் எங்களை எப்படி ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்கள்? உங்களது கார் அல்லது வீடு உங்களிடமிருந்து திருடப்படுகின்றது. நடந்தது நடந்து விட்டது என்று உங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்கின்றார்கள். நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்” என்றும் அன்வார் கேள்வி எழுப்பினார்.

இது முறைகேடு, மோசடி. எந்தவொரு மலேசியக் குடிமகனும் இதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அன்வார் உறுதியாகக் கூறினார்.

அதே வேளையில் அம்னோ, தேசிய முன்னணி வென்ற பல தொகுதிகளில் எந்தவித மோசடிக்கும் ஆதாரம் இல்லையென்றால் நாங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு அதனை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் நாங்கள் தோல்வியுற்ற சுமார் 30 தொகுதிகளில் தேர்தல் மோசடிகள் நடந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை நாங்கள் நிச்சயம் எதிர்த்து வழக்கு தொடுப்போம்” என்றும் அன்வார் சூளுரைத்தார்.