மே 21 – இரண்டாகப் பிளவு பட்டு நிற்கும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஒரு பிரிவின் தலைவரான வேதமூர்த்தி தேசிய முன்னணி பக்கம் சாய்ந்து இன்றைக்கு துணையமைச்சராகவும் உயர்ந்து விட்ட நிலையில், அந்த இயக்கத்தின் மற்றொரு முக்கிய தலைவரான வேதமூர்த்தியின் சகோதரர் உதயகுமார் மக்கள் கூட்டணி பக்கம் இணைவார் என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.
அதன் முதல் கட்டமாக இன்று உதயகுமார், மக்கள் கூட்டணி தலைவர்களை நோக்கி விடுத்த அறிக்கையொன்றில் நாடற்ற இந்தியர்களின் பிரச்சனை பற்றி ஆராய்வதற்காக அரச விசாரணைக் குழு ஒன்றை அமைக்க எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவசர தீர்மானம் ஒன்றை சமர்ப்பிக்க மக்கள் கூட்டணி முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
அவ்வாறு செய்தால், மக்கள் கூட்டணியின் இந்த அவசரத் தீர்மான முயற்சிக்கு துணை நிற்கத் தான் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலின்போது, நாங்கள் வெற்றி பெற்றால் 100 நாட்களுக்குள் நாடற்ற இந்தியர்களின் பிரச்சனையைத் தீர்த்து வைப்போம் என மக்கள் கூட்டணி தலைவர்கள் உறுதியுடன் விடுத்த அறிவிப்பு தன்னைக் கவர்ந்ததாகவும் அதற்காக அவர்களைப் பாராட்டுவதாகவும் உதயகுமார் கூறியுள்ளார்.
ஆனால், கோத்தா ராஜா நாடாளுமன்றத்திலும், ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியிலும் மக்கள் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டு தனது வைப்புத் தொகையையும் இழந்தவர் உதயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
சபா அடையாள அட்டை அரச விசாரணை ஆணையம் போல் இந்தியர்களுக்கும் ஆணையம் தேவை.
“சபா மாநிலத்தில் கள்ளக் குடியேறிகளுக்கு சட்டவிரோதமாக அடையாள அட்டை வழங்கப்பட்டது குறித்து ஆராய அரச விசாரணைக்குழு ஒன்றை அமைக்க போராடியதைப் போன்று நாடற்ற இந்தியர்களுக்காக அத்தகைய விசாரணைக் குழு ஒன்றை அமைக்க அவசரத் தீர்மானத்தை மக்கள் கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டும்” என உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
“அதே வேளையில் இந்த தீர்மானத்தைக் கொண்டுவரச் சொல்வதற்காக, மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை இந்தியர்களின் அவலத்தை வெளியே கொண்டுவருவதற்காக ஹிண்ட்ராப்பை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தாதீர்கள்” என்றும் உதயகுமார் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுமையிலும் நாடற்ற குடிமக்களாக 3 லட்சம் இந்தியர்கள் இருப்பதாக பிகேஆர் கட்சி வலியுறுத்தி வரும் வேளையில் இந்த எண்ணிக்கையை மத்திய அரசாங்கம் எப்போதும் போல் மறுத்து வருகின்றது.
உதயகுமாரின் சகோதரரான பி.வேதமூர்த்தி, துணையமைச்சரானவுடன் நடத்திய பத்திரிக்கை சந்திப்பில் நாடற்ற இந்தியர்களின் பிரச்சனையை அடுத்த ஐந்தாண்டுகளில் அரசாங்கத்தின் துணையோடு தீர்த்து வைப்போம் என கூறியிருந்தார்.