கோலாலம்பூர், மே 28 – மஇகா கட்சித் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அக்கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு மஇகாவின் நடப்பு துணைத் தலைவரான டாக்டர் சுப்ரமணியம் போட்டியிடுவதற்குத் தயாராகி வருவதாக அக்கட்சி வட்டாரங்களில் ஆரூடங்கள் வெளியாகின்றன.
மஇகாவின் தேசியத் தலைவருக்கான தேர்தல் கடந்த 1989 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்றது. அத்தேர்தலில் டத்தோஸ்ரீ சாமிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்ட ஜூம்போ மணியம் என்று அழைக்கப்படும் டான்ஸ்ரீ சுப்ரமணியம் தோல்விகண்டார்.
தேர்தலின் மூலம் புதிய தேசியத் தலைவரை 3,700 கிளைத் தலைவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இவர்களில் 45 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முன்னாள் தலைவர் சாமிவேலுவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
துணைத்தலைவர் பதவிக்கு சரவணன் போட்டியிடுவாரா?
மஇகாவின் தலைவர் பதவிக்கு சரவணன் போட்டியிடுவதாக இருந்தால், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
நடப்பு உதவித் தலைவரான டத்தோ எம்.சரவணன் அப்பதவிக்கு போட்டியிடுவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.
இது குறித்து சரவணன் மலேசிய நண்பன் நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது, மஇகா தேர்தல் தொடர்பாக கட்சியின் தேசியத் தலைவர் ஜி.பழனிவேலுவுடனோ அல்லது துணைத்தலைவர் டாக்டர் சுப்ரமணியத்துடனோ தாம் பேச்சுவார்த்தைகள் எதையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கட்சி உறுப்பினர்கள் ஆதரவையும், முடிவையும் பொறுத்து துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து தான் பரிசீலிக்கக் கூடும் என்றும் சரவணன் தெரிவித்துள்ளார்.