கோலாலம்பூர், ஜூன் 4 – தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரனின் இறப்புக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் அந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் உடனடியாகப் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவலில் கடந்த 11 நாட்களில் மட்டும் 3 பேர் இறந்திருப்பது குறித்து கருத்துரைத்த சாஹிட், “தடுப்புக் காவலில் விசாரணைக்காக வைக்கப்படுபவர்கள் மரணமடைவது ஏற்றுக்கொள்ள முடியாதது. காவல்துறையினர் விசாரணை செய்வதற்கான சட்டங்களை மீறி இருந்தால் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதோடு தடுப்புக் காவல்நிலையங்களில் இனி 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்புக் கேமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் இங்கு எதையும் மறைக்க முடியாது.
எனவே தர்மேந்திரன் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளை பணிநீக்கம் செய்வது குறித்து தற்போது கலந்தாலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.