மும்பை, ஜூன் 8 – சம்பள பாக்கி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவன ஊழியர்களிடம், “தன்னால் பணம் வழங்க முடியாது’ என அதன் தலைவர் விஜய் மல்லைய்யா தெரிவித்துள்ளார்.
கடன் பிரச்னையால் நொடித்து போய் உள்ள ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்நிறுவனத்தின் தலைவரான தொழில் அதிபர் விஜய் மல்லைய்யாவுக்கு, பிரபல மதுபான நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்சில் பங்குகள் உள்ளன.
இதை பிரிட்டனின் மிகப் பிரபலமான ஸ்மிர்நாப், ஜானி வாக்கர் போன்ற தரம் வாய்ந்த ஓட்கா, விஸ்கி உட்பட பல மதுபானங்களைத் தயாரிக்கும் டியாஜியோ என்ற நிறுவனத்துக்கு விற்க விஜய் மல்லைய்யா ஒப்பந்தம் செய்தார்.
இதன் மூலம் அவருக்கு 11,166 கோடி இந்திய ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஜய் மல்லைய்யாவுக்கு உள்ள பங்கு மட்டும் 5,742 கோடி இந்திய ரூபாய். இருப்பினும் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில், தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் முடியாமல் போனதால் நேற்று முன் தினம் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.
இந்நிலையில் நேற்று போராட்டம் நடத்திய ஊழியர்களின் பிரதிநிதிகள், விஜய் மல்லைய்யாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் சம்பள பாக்கியை கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை என விஜய் மல்லைய்யா உறுதிபட தெரிவித்துள்ளார். இதையடுத்து போராட்டத்தை தொடர்ந்து நடத்த ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.