Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலகும் வரை 505 பேரணிகள் தொடரும் – தியான் சுவா...

தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலகும் வரை 505 பேரணிகள் தொடரும் – தியான் சுவா உறுதி

586
0
SHARE
Ad

tian-chuvaஜூன் 19 – பொதுத் தேர்தலில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் 505 கறுப்புப் பேரணிகளைத் தொடர்ந்து, அதன் உச்சகட்டமாக எதிர்வரும் 22ஆம் தேதி தலைநகர், பாடாங் மெர்போக்கில் மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்படும் என மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.

இதன் தொடர்பில் மலேசியாகினி செய்தி இணைய தளத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் பத்து நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான தியான் சுவா, தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் தங்களின் தவறுகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகும் வரை 505 கறுப்புப் பேரணிகள் ஓயாது என்று சூளுரைத்துள்ளார்.

பொதுமக்களின் கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்பட்டுக் கொண்டிருக்க முடியாது என்று கூறிய தியான் சுவா, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் எந்த நிலையிலும் திரும்ப பெற்றுக்கொள்ளாது என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிலர் என்னிடம் கூறினர், ஆனால் இப்போது அந்த சட்டம் மீட்டுக் கொள்ளப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இரண்டு தரப்பு அரசியல் அணிகளும் நாடாளுமன்றத்தில் நள்ளிரவு வரை விவாதம் நடத்தி விரலில் இடப்படும் அழியா மை 7 நாட்களுக்கு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு தேர்தல் சட்டங்களை மாற்றினோம். இந்த சட்டத்தை தேர்தல் ஆணையமே மீறிவிட்டது” என்றும் தியான் சுவா குற்றம் சாட்டினார்.

பொதுத் தேர்தலில் அழியாத மையை முறையாகப் பயன்படுத்தத் தவறிய தேர்தல் ஆணையம் செய்துள்ள குற்றம் மன்னிக்க முடியாத ஒன்று என்று அவர் மேலும் கூறினார்.

சட்டத்தை மீறியதற்காக ஒட்டு மொத்தமாக பதவி விலகுவதுதான் தங்களின் தவறுகளுக்கு குறைந்த பட்சம் அவர்கள் செய்யக் கூடிய காரியமாக இருக்க முடியும் என தியான் தெரிவித்தார்.

நாளடைவில் இந்த பேரணிகள் மீது மக்களுக்கு அலுப்பு தட்டிவிடும் என்ற ஐயப்பாட்டையும் தியான் சுவா மறுத்துள்ளார்.

“பேரணிகளை ஏற்பாடு செய்பவர்களுக்கும், அது தொடர்பாக செய்தி எழுதுபவர்களுக்கும் வேண்டுமானால் அலுப்பு தட்டலாம். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் உள்ளவர்கள் அந்த கூட்டங்களில் ஆர்வமாகக் கலந்து கொள்வதோடு, பக்காத்தானுக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.அந்த மக்களுக்கு என்றும் அலுப்புத் தட்டாது” என்று தியான் சுவா குறிப்பிட்டார்.

“மக்களின் எழுச்சியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பதற்காக, எங்களது உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. இது ஒரு நீண்ட போராட்டம். எங்களின் உரிமை ஏற்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்.தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தேசிய அளவில் பக்காத்தான் தாக்கல் செய்துள்ள தேர்தல் மனுக்கள் தோல்வியடையுமானால், தேர்தல் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டி மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராடுவோம்” என்றும் தியான் சுவா தெரிவித்தார்.

“நம்முடைய சட்டம் சரியாக இருந்து, தேர்தல் மனுக்கள் தொடர்பாக நீதிபதிகளும் சரியான தீர்ப்பு வழங்கினால், நாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை நீதிமன்றம் சரியான நீதியை வழங்காத பட்சத்தில், வீதிகளில் இறங்கிப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று தியான் சுவா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.