கோலாலம்பூர், ஜூன் 21 – பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகராக ம.இ.கா உதவித் தலைவர்களில் ஒருவரும், பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ எஸ்.கே.தேவமணி நியமிக்கப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் தற்போது பேசப்பட்டு வருகிறது.
அதோடு சபாநாயகர் நியமனதிற்கான சான்றிதழில் தேவமணி கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஸாம்ரி அப்துல் காதிர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேவமணி, நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதிக்கு மாற்றப்பட்டார். ஆனால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி.எஸ்.எம் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஜெயகுமாரிடம் தோல்வியைத் தழுவினார்.
மேலும், கடந்த 2008 ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தில் மக்கள் கூட்டணி ஆட்சியமைத்த போது, ஜ.செ.க கட்சியைச் சேர்ந்த வி.சிவக்குமாருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது.
அதன் பின்னர், நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் பேராக் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது.
ஆனால் பேராவில் ம.இ.கா போட்டியிட்ட 3 இடங்களிலும் தோல்வியைத் தழுவியதால் சபாநாயகர், மந்திரி பெசார் ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவி நியமனங்களுக்கு கடும் குழப்பங்கள் நீடித்தன.
இறுதியாக, பேராக் மாநில மந்திரி பெசாரின் இந்தியர் விவகார சிறப்பு ஆலோசகராக ம.இ.கா லுமுட் தொகுதியின் தலைவர் இளங்கோ வடிவேலுவும், பேராக் மாநில அரசாங்க சிறப்பு அதிகாரியாக சிவராஜ் சந்திரனும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சபாநாயகர் பதவிக்கு தற்போது தேவமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பேராக் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைத்து கட்சிகளும் காத்திருப்பதாக ம.இ.கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.