தோஹா, ஜூன் 25- அரேபியாவின் பணக்கார நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் மன்னராக ஷேக் ஹமது பின் கலிபா அல்தானி (படம்) இருந்து வருகிறார். இவர் தனது அதிகாரத்தை இளவரசனான மகன் ஷேக் தமிமிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
அவர் தனது குடும்பத்தினர் மற்றும் சமூகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி அதிகாரத்தை ஒப்படைப்பது குறித்து பேசினார். அதன்படி இன்று நடைபெறுகிற கத்தார் மக்கள் பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு குறித்து மன்னர் பேசுவார்.
1995 ஆம் ஆண்டு கத்தாரின் மன்னராக இருந்த தனது தகப்பனார் ஷேக் கலிபாவை ஆட்சி கவிழ்ப்பு செய்து அந்த அதிகாரத்துக்கு வந்தார் ஷேக் ஹமது. பின்னர் தனது திறமையால் எரிவாயு வளமிக்க கத்தார் நாட்டை நவீனமயமாகவும் உலக அளவில் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தியும் கொண்டார்.
1980-ஆம் ஆண்டு பிறந்தவரான மகுடம் சூடப்போகும் ஷேக் தமிம் கத்தார் ஆயுதப்படையின் துணைக்கமாண்டராக இருந்து வருகிறார்.