இஸ்லாமாபாத், ஜூன் 26- பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் 27-12-2007ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் இந்த கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
பெனாசிர் பிரசாரத்திற்கு சென்றபோது முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷரப் போதுமான பாதுகாப்பு அளிக்காததால் தான் இந்த படுகொலை நடைபெற்றது என கூறப்பட்டு வந்தது.
ஆட்சி மாற்றம் காரணமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வந்த முஷரப் சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற போது பாகிஸ்தான் திரும்பினார்.
நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து கைது செய்ய உத்தரவிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முஷரப் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராவல்பிண்டி கோர்ட்டில் பெனாசிர் கொலை வழக்கு இன்று நடைபெற்றது.
அப்போது, பாகிஸ்தான் புலனாய்வு துறை அதிகாரிகள் பெனாசிர் கொலை வழக்கில் பர்வேஸ் முஷரப்பையும் குற்றவாளியாக சேர்க்கும்படி நீதிபதி ஹபீபுர் ரஹ்மானிடம் மனு தாக்கல் செய்தனர்.
பெனாசிரை கொல்ல தீட்டப்பட்ட சதி திட்டத்தில் முஷரப்புக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க பத்திரிகையாளர் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த மனுவினை புலனாய்வு துறையினர் தாக்கல் செய்தனர்.
அரசு தரப்பு வக்கீல் இன்று ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் 2ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
அடுத்த விசாரணையின் போது பெனாசிர் கொலை வழக்கு குற்றவாளிகள் பட்டியலில் முஷரப்பின் பெயரும் இணைக்கப்படும் என தெரிகிறது.