புதுடெல்லி, ஜூன் 26- மழை வெள்ளத்தால் உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரழிவு ஏற்பட்டு மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். அங்குள்ள கேதார்நாத்-பத்ரிநாத்துக்கு புனித யாத்திரை மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலை துண்டிக்கப்பட்டதால் தவித்தனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள்ஹெலிகப்டரில் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மழை நீடித்தாலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
கேதார்நாத்-பத்ரிநாத் பகுதியில் உள்ள சிறிய கிராமங்கள் உருக்குலைந்து விட்டன. அங்கு உயிர் தப்பிய மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தர முடியவில்லை. மாநில அரசு வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மீட்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
உள்ளூர் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அங்கு மழையுடன் கடும் குளிர் நிலவுகிறது. ஊரைச் சுற்றி வெள்ளம் ஓடினாலும் குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் இல்லை. வெள்ளத்தில் பிணங்கள் மிதந்து செல்லும் நிலையில் அசுத்தம் கலந்த நீரை குடிப்பதால் மக்களிடையே காலரா போன்ற தொற்று நோய் பரவுகிறது. ஏராளமான மக்கள் வாந்தி-பேதியால் அவதிப்படுகிறார்கள். குளிர் காய்ச்சலும் பரவுகிறது.
கேதார்நாத் பள்ளத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தில் 128 பேருக்கு காய்ச்சலும் வாந்தி-பேதியும் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரண முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதே போல் கேதார்நாத்தில் மீட்கப்படும் பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய் பரவியுள்ளது. அவர்கள் காய்ச்சலுடன் மீட்கப்படுகிறார்கள்.
கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்ற பேரிடர் மீட்பு குழுவினரும் ராணுவத்தினரும் ஏற்கனவே மருத்துவ முகாம்கள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
என்றாலும் அது போதுமானதாக இல்லை. இதையடுத்து மத்திய அரசு அங்கு கூடுதலாக டாக்டர்கள் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய உயர் மட்டக் குழுவை அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்கள்.
சுகாதாரமற்ற தண்ணீர் தவிர, ஆங்காங்கே பிணங்கள் மீட்கப்படாமல் சிதறி கிடப்பதால் வான் வழியாகவும் தொற்று நோய் பரவுகிறது. ஹரித்துவாரில் உள்ள ஆழ்வார்பூர், உத்தரகாசியில் உத்வி, ருத்ரபிரயாக் சந்திர பூரி ஆகிய பகுதிகள் தொற்று நோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன.
கேதார்நாத் குப்த காசியில் தண்ணீர் மாசுபட்டு இருப்பதாலும் பிணங்கள் சிதறிக்கிடப்பதாலும் அந்தப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அங்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கேதார் நாத் பள்ளத்தாக்கு பகுதிக்கு கூடுதலாக 8 மருத்துவ குழுக்களை அனுப்பி வைத்துள்ளது.
அடுத்தடுத்து மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று டெல்லியில் சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார்.