Home கலை உலகம் திரை விமர்சனம்: ‘அன்னக் கொடி’யுடன் மீண்டும் பாரதிராஜா !

திரை விமர்சனம்: ‘அன்னக் கொடி’யுடன் மீண்டும் பாரதிராஜா !

1615
0
SHARE
Ad

Annakodi-Film-Posterஜூன் 28 – நீண்ட இடைவெளிக்குப் பின்னர், பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்திருக்கும் படம் “அன்னக் கொடி”.

கடந்த ஒரு வருடமாக தயாரிப்பில் இருந்த “அன்னக் கொடியும் கொடிவீரனும்” பெயர் சுருங்கி அன்னக் கொடி என்ற பெயருடன் மனோஜ், லஷ்மண், கார்த்திகா நடிப்பில் வெளிவந்திருக்கின்றது.

வழக்கமான தமிழ்ப்பட வரைமுறைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் படத்தின் திரைக்கதையை அதன் போக்கில் இயல்பாக ஓடவிட்டிருப்பதன் மூலம் தனது வழக்கமான பாதையில் இருந்து விலகி நின்று படம் எடுத்திருக்கின்றார் பாரதிராஜா.

#TamilSchoolmychoice

இருந்தாலும், அவரது படங்களுக்கே உரிய பல முத்திரைகள் இதில் காணவில்லை.

உதாரணமாக, கிராமியப் படமாக இருந்தாலும், பாரதிராஜாவின் வடிவமைப்பில் சிறு சிறு கதாபாத்திரங்களெல்லாம் மிளிர்வார்கள். அதோடு படத்தில் ஒரு கலகலப்பு இருக்கும். பாடல்களும், அதன் காட்சியமைப்புகளும் வித்தியாசமாக ரசிக்கும்படி இருக்கும். வசனங்கள் கூர்மையாக இருக்கும். 35 வருடத்திற்கு முந்தைய பதினாறு வயதினிலே படத்தின் வசனங்கள் கூட இன்றைக்கும் பலர் மறக்காமல் நினைவில் வைத்திருக்கின்றார்கள். ஆனால், இதுபோன்ற பாரதிராஜாவின் முத்திரைகள் எல்லாம் அன்னக் கொடி படத்தில் இல்லை.

இரண்டு மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றியே கதை அமைக்கப்பட்டிருப்பது படத்திற்கு சற்று தொய்வைத் தருகின்றது. படத்தின் பல காட்சிகள் ஏற்கனவே வந்த ஏதாவது ஒரு பாரதிராஜா படத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றது.

ஆடுகள் மேய்த்துக் கொண்டே கார்த்திகா வந்தால் நமக்கு வாத்துகள் மேய்த்த ‘நாடோடித் தென்றல்’ ரஞ்சிதா ஞாபகத்திற்கு வருகின்றார். மனோஜ்ஜின் வில்லத்தனத்தைப் பார்க்கும் போது கிழக்குச் சீமையிலே பாண்டியன் ஞாபகத்திற்கு வருகின்றார். கார்த்திகா வயதுக்கு வரும் காட்சி பழைய பதினாறு வயதினிலே ஸ்ரீதேவியை நினைவுக்கு கொண்டு வருகின்றது. வட்டிக்கு கடன் வழங்கும் மனோஜின் அப்பாவைப் பார்த்தால் புதுநெல்லு புதுநாத்து நெப்போலியன் மனக்கண்ணில் வந்து நிற்கின்றார்.

இத்தகைய பழைய படங்களின் நினைவூட்டல்களைத் தவிர்க்க முயற்சித்திருக்கலாம்.

இறுதிக் காட்சியில் வழக்கமாக  பாரதிராஜா படங்களில் வரும் பரந்த மண் மைதானம் – அதில் ஊர்க்காவல் தெய்வத்தின் சிலை – அதைச் சுற்றி நடக்கும் அரிவாள் சண்டை – தெறிக்கும் ரத்தம் – அதை மட்டும் விட்டுவிடாமல் இதிலும் வைத்திருக்கின்றார் இயக்குநர் இமயம்.

வேற்று சாதி காதலாக முதலில் தொடங்கினாலும் சாதிச் சண்டைகளுக்குள் மூழ்கி விடாமல் கதையை கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் மனப் போராட்டமாக மாற்றியமைத்திருப்பது சற்று வித்தியாசம்.

கதை என்ன?

செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனான ஆடு மேய்க்கும் பையனுக்கும் வேற்று சாதி பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல், கதாநாயகியின் அம்மாவின் தலையீட்டால் கைகூடாமல் போக, திசை மாறும் அவர்களின் வாழ்க்கை மீண்டும் அவர்களை எவ்வாறு ஒன்று சேர்க்கின்றது என்பதுதான் கதை.

பல ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த கிராமத்தையும் அதன் சில அம்சங்களையும் காட்ட முயற்சித்திருக்கின்றார்கள்.

உதாரணமாக, முதன் முதலாக வீட்டிற்கு மின்சாரம் இணைப்பது – ஊருக்குள் சைக்கிளில் வரும் அந்தக் காலத்து போலீஸ் சீருடையில் வரும் போலீஸ்காரர்கள் – பழைய காலத்து போலீஸ் ஸ்டேஷன் – அந்த காலத்து மாட்டு வண்டிகள் இப்படி சிலவற்றைச் சொல்லலாம்.

ஆரம்பம் முதலே படம் மெதுவாகப் பயணிக்கின்றது. இதற்குக் காரணம், திரைக்கதையே அப்படித்தானா, அல்லது படத்தின் தொகுப்பு (எடிட்டிங்) சொதப்பலா என்பது விளங்கவில்லை. படத்தில் நகைச்சுவை காட்சிகள் இல்லாததும் படத்தின் சுவாரசியத்தைக் குறைக்கின்றது.

நடிகர்கள்Annakodiyum-Kodiveeranum

படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் மனோஜ் உண்மையிலேயே வித்தியாசம் காட்டி கலக்கியிருக்கின்றார். கதாநாயகனை விட இவருக்குத்தான் கதையில் முக்கியத்துவமும் அதிகம். காட்சிகளும் அதிகம். அப்பாவின் தயவோ?

சரியாக பயணித்தால், வில்லன், மற்றும் குணாதிசயக் கதாபாத்திரங்களில்  இனி மனோஜ் ஒரு சுற்று வரலாம்.

கதாநாயகன் லஷ்மணுக்கு, பல காட்சிகளில் குரல் மட்டும் ஒத்துழைக்க மறுக்கின்றது.

பல படங்களை இயக்கிய மனோஜ்குமார் வில்லனுக்கு அப்பா வேடத்தில் வருகின்றார். வட்டிக்கு பணம் கொடுக்க முடியாதவர்களின் மனைவிகளைத் தூக்கி வந்து வீட்டில் வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துகின்றார்.

படத்தின் மற்றொரு ஆறுதல் அம்சம் கதாநாயகி கார்த்திகா. கிராமத்து பெண்ணாகவே மாறியிருக்கின்றார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை கனகச்சிதமாக செய்திருக்கின்றார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் சிவா என்ற மலேசிய நடிகரும் நடித்திருக்கின்றார்.

கார்த்திகாவின் அம்மாவாக வரும் பழைய நடிகை ரமாபிரபா, தனது ஆவேசத்தையும், ஆக்ரோஷத்தையும் பல காட்சிகளில் காட்டி கைதட்டல் வாங்குகின்றார்.

பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் அவ்வளவு முனைப்பு காட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

தெளிவான ஒளிப்பதிவும், அழகான கிராமத்து காட்சிகளும் படத்திற்கு பலம். ஆனாலும், படம் பழைய காலத்து கதையாகக் காட்டப்படுவதால் பசுமையான காட்சிகளை, நவீனமான கிராமத்து அம்சங்களை இயக்குநரால் காட்ட முடியவில்லை. ஒரு சில இடங்களை மட்டுமே கேமரா சுற்றி சுற்றி வருகின்றது.

“அன்னக் கொடி” – பாரதிராஜாவுக்காக ஒரு முறை பார்த்து வைக்கலாம்.

இந்த படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணையத் தொடர்பின் வழி காணலாம்.

(மலேசியாவில் இன்று முதல் அன்னக் கொடி படம் சினிமா அரங்குகளில் திரைக்கு வருகின்றது. இந்த படத்தின் இன்றைய முதல் காட்சியைப் பார்த்துவிட்டு எழுதப்பட்ட விமர்சனம் இது)

-இரா.முத்தரசன்