சபா, ஜூலை 1 – பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், சபா மாநிலத்தில் குடியேறி, நீல நிற அடையாள அட்டை பெற்றுள்ளார் என்றும், அவர் தேர்தலில் வாக்களிக்க முற்பட்ட போது அங்குள்ள உள்ளூர்வாசிகளால் மிரட்டப் பட்டார் என்றும் அரச விசாரணை ஆணையம்(ஆர்.சி.ஐ) கண்டறிந்துள்ளது.
அப்துல்லா மஹ்முட்(வயது 55) என்ற அந்த நபர், 10 வயதில் கோலாலம்பூர் வழியாக தனது மாமாவுடன் சபாவில் குடியேறியுள்ளார். அவருக்கு எந்த ஒரு ஆவணங்களும் இன்றி நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்துல்லா ஆர்.சி.ஐ அதிகாரிகளிடம் கூறுகையில், “ஹாரிஸ் சாலே முதலமைச்சராக இருந்த காலத்தில், கோத்தா கினபாலுவில் உள்ள தேசிய பதிவு அலுவலகத்தில் அடையாள அட்டை கோரினேன்.”
“அவர்கள் எனது புகைப்படம் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யச் சொன்னார்கள். நான் படிப்பறிவில்லாதவன் என்று கூறினேன். அதனால் அவர்களே எனது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார்கள். அதன் பிறகு எனக்கு நீல நிற அடையாள அட்டை கிடைத்தது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு அவரது அடையாள அட்டையில் ‘மலாய்’ இனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.