கோலாலம்பூர், ஜூலை 2 – சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இறப்பது தொடர் நிகழ்வாகிப் போய்விட்டது.
இதற்கு விசாரணை செய்வது குறித்து காவல்துறையினருக்கு போதிய பயிற்சி தராததும் ஒரு காரணம் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
வழக்கறிஞர் மன்றத்தின் குற்றவியல் சட்டப் பிரிவின் துணைத் தலைவரான வி.சிதம்பரம் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நடந்த குகன் வழக்கை மேற்கோள் காட்டிக் கருத்துரைக்கையில், “நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்படுவதில்லை.”
“காரணம் அதன் மேல் பல புகார்கள் எழுந்தன மற்றும் விசாரணையில் வழக்கறிஞர்கள் அது குறித்து கேள்வி கேட்கும் போது அந்த வாக்குமூலங்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் காரணமாக நீதிமன்றம் அது போன்று ஒப்புதல் வாக்கு மூலம் வாங்குவதை நிறுத்திக் கொண்டது.”
“இதன் விளைவாக காவல்துறை,தடுப்புக் காவலில் வைக்கப் படுபவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க சித்திரவதை செய்யத் தொடங்கினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “காவல்துறையினருக்கு சித்திரவதை செய்யாமல் அவர்களிடமிருந்து வாக்குமூலம் வாங்குவது எப்படி என்பது குறித்து போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. எனவே இனி தடுப்புக் காவல் மரணங்களை தடுக்க வேண்டுமானால்,காவல்துறையினருக்கு போதிய பயிற்சி தேவை” என்றும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட குகன் மர்மமான முறையில் இறந்தார்.
அவரது இறப்புக்கு காவல்துறையும், அரசாங்கமும் தான் பொறுப்பு என்று கூறி,கடந்த வாரம் கோலாலம்பூர் உயர்நீதி மன்றம், குகனின் குடுபத்தாருக்கு நஷ்ட ஈடாக 751,700 ரிங்கிட்டும், இவ்வழக்கில் அவர்கள் செய்த செலவுகளுக்காக 50,000 ரிங்கிட்டும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல் முறையீடு செய்யப்போவதாக உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி நேற்று அறிவித்தார்.