Home உலகம் எகிப்தை ராணுவம் கைப்பற்றியது : பதவியில் இருந்து மோர்சி வெளியேற்றப்பட்டதாக பிரகடணம்

எகிப்தை ராணுவம் கைப்பற்றியது : பதவியில் இருந்து மோர்சி வெளியேற்றப்பட்டதாக பிரகடணம்

535
0
SHARE
Ad

கெய்ரோ, ஜூலை 4- எகிப்து அதிபர் முஹம்மது மோர்சி பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர்.

தலைநகர் கெய்ரோவில் உள்ள தாஹிர் சதுக்கத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

EGYPTபோராட்டக்காரர்களை ஒடுக்க ஒருபுறத்தில் ராணுவத்தை ஏவிவிடும் முஹம்மது மோர்சி, மற்றொரு புறத்தில் கட்சி தொண்டர்களையும் தூண்டிவிட்டு போராட்டக்காரர்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்.

எகிப்து சந்தித்து வரும் இந்த சிக்கலான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ராணுவம் களமிறங்கியது.

‘மக்களின் கோரிக்கைக்கு அதிபர் முஹம்மது மோர்சி 48 மணி நேரத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால், இதர அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய பாதையை ராணுவம் தேர்ந்தெடுக்க வேண்டியதாகி விடும் என ராணுவம் எச்சரித்தது.

அரசியலிலோ அரசு நிர்வாகத்திலோ ராணுவம் தலையிடாது. ஜனநாயக வரம்புக்குட்பட்டு தனக்கு அளிக்கப்பட்ட பணியை ராணுவம் நிறைவேற்றும். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் வேளையில் தேவையான நடவடிக்கையை எடுக்க ராணுவம் தயங்காது’ என எகிப்து ராணுவத்தின் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ செய்தியில் கூறப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ராணுவம் குரல் கொடுத்திருப்பதை எகிப்து மக்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இதேபோல், மோர்சியை எதிர்த்து போராடி வரும் புரட்சியாளர்களும் கெடு விதித்திருந்தனர்.

மோர்சி பதவி விலக வேண்டும் என நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 கோடியே 20 லட்சம் மக்கள் கையொப்பமிட்டனர்.

போராட்டக்காரர்களின் மீது அடக்குமுறையை ஏவி வரும் அதிபரின் போக்கை கண்டித்து எகிப்தின் சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி, தொலைத் தொடர்பு துறை மந்திரி, சுற்றுச் சூழல் துறை மந்திரி, சுற்றுலா துறை மந்திரி என 4 மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

தற்போது எகிப்தில் நடைபெற்று வரும் நிலவரமும், கலவரமும் 2011ம் ஆண்டு லிபியா அதிபர் கடாபியை பதவியை விட்டு வெளியேற்றிய மக்கள் புரட்சியை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது என உலக ஊடகங்கள் கவலை தெரிவித்தன.

ராணுவம் அளித்த 48 மணிநேர கெடு முடிவடைந்ததையடுத்து ராணுவ டாங்கி வாகனங்கள் தற்போது அதிபர் மோர்சியின் மாளிகையை முற்றுகையிட்டன.

ஆளும் கட்சியை சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முஹம்மது மோர்சி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் பொதுமக்களுக்கு பேட்டியளித்த ராணுவ தளபதி அப்டெல் பத்தா அல்-சிசி எகிப்து அதிபர் பதவியிலிருந்து முகம்மது மோர்சி வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மஹர் எல்-பெஹெய்ரி இடைக்கால அதிபராக நீடிப்பார் எனவும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பையடுத்து மக்கள் வானவேடிக்கைகளை நடத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.