ஜோஹன்னஸ்பர்க், ஜூலை 5- தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவரான நெல்சன் மண்டேலா (வயது 94) கடுமையான நுரையீரல் நோய் தொற்றின் காரணமாக கடந்த மாதம் 8ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலேயே இருந்துவந்த அவருக்கு உயிர் காப்பு இயந்திரம் பொருத்தப்பட்டது.
மண்டேலாவின் பேரன் மண்ட்லா, குடும்ப கல்லறையிலிருந்து மூன்று சடலங்களை எடுத்துச் சென்று தன்னுடைய பண்ணை வீட்டில் புதைத்தது குறித்து குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு சென்றனர்.
அப்போது ஜூன் 26ஆம் தேதி ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில், நெல்சன் மண்டேலா கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், மருத்துவர்கள் அவரது உயிர் காப்பு இயந்திரத்தினை நீக்கிவிடுமாறும் குடும்ப அங்கத்தினர்களிடம் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட வழக்கை விரைந்து முடிப்பதற்கான ஆவணமாகவே இந்த அறிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டது என்று மண்டேலா குடும்பத்தின் வழக்கறிஞரான வெஸ்லி ஹேஸ் கூறுகின்றார்.
இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று அரசும், குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் கூறியுள்ளனர். மண்டேலா சவுகர்யமாக இல்லை என்றபோதிலும் வலியினால் சிரமப்படவில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
எனினும், நேற்று இன்னும் முடிவடையாத குடும்ப பிரச்சனைகளை மண்ட்லா பொதுமக்களுக்கு வெளிப்படையாக்கினார். தொலைக்காட்சி சந்திப்பு ஒன்றில் அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பற்றி நேரடியாகப் புகார் தெரிவித்தது பொதுமக்கள் அனைவரையும் எட்டியது எனலாம்.
இந்தக் கல்லறைப் பிரச்சினை தொடர்பாக தான் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்ல விரும்பவில்லை என்பதையும் மண்ட்லா தெரிவித்தார்.