சென்னை, ஜூலை 8– தி.மு.க. தலைவர் கருணா நிதியின் 90–வது பிறந்த நாளையொட்டி இளைஞர் அணி துணை செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட் டில் ‘‘வரலாறாய் வாழ்பவர்’’ என்ற தலைப்பில் கவிதை போட்டி நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்து 778 கவிஞர்கள் கவிதை எழுதி னார்கள். இதில் 13 கவிதைகள் பரிசுக்குரியவையாக தேர்வு செய்யப்பட்டன. 77 சிறப்பு கவிதைளும் தேர்வு செய்யப்பட்டு 90 கவிதைகள் அடங்கிய கவிதை நூல் தயாரிக்கப்பட்டது.
இந்த நூலின் வெளியீட்டு விழா ராணி சீதை மன்றத்தில் இன்று நடந்தது. மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சுகவனம் எம்.பி. வரவேற்றார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பரிசுகள் வழங்கினார்.
முதல் பரிசு பெற்ற திண்டுக்கல் கவிஞர் முருகுக்கு ரூ.1 லட்சமும், 2–ம் பரிசாக தேவக்கோட்டை ஆதிக்கு ரூ.50 ஆயிரமும், 3–ம் பரிசாக சென்னையை சேர்ந்த இசபெல்லாவுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஆறுதல் பரிசாக கவிஞர்கள் ஜீவா, முத்து லட்சுமி, கலைவாணி, சோமஸ் கந்தன், இளங்கோவன், விமல், மல்லியப்பன், தமிழ் தம்பி, சுடர் நிலவன், சாய்பு மரைக்காயர், மானூர் புகழேந்தி ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப் பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர். டி.சேகர், சுதர்சனம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பி.கே.சேகர்பாபு, பனை மரத்துப்பட்டி ராஜேந்திரன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சிற்றரசு, மா.பா.அன்புதுரை, கு.க. செல்வம், அசன்முகமது ஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர். தாயகம் கவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிஞர் முருகுவுக்கு ரூ,1 லட்சம் பரிசு தொகையை ஆ.ராசா வழங்கிய போது எடுத்தபடம். அருகில் மா.சுப்பிரமணியன், சுகவனம் எம்.பி., பி.கே.சேகர்பாபு உள்ளனர்.