கோலாலம்பூர், ஜூலை 10 – காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையத்தை (Independent Police Complaints and Misconduct Commission – IPCMC) ஐ அமைக்க வேண்டும் என்று கூறப்படுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனைடி துங்கு ஜாபர், அது காவல்துறையினரை குற்றவாளிகளைக் காட்டிலும் மோசமாக நடத்தும் என்று விமர்சித்துள்ளார்.
“ஐபிசிஎம்சி அரசியலமைப்பு மற்றும் நீதியை மீறக்கூடியது. நீதிமன்றத்தின் வலிமையை ஒதுக்குவதோடு, அந்த அமைப்பு இறுதித் தீர்ப்பாளராகவும் மாறுகிறது” என்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று வான் ஜுனைடி தெரிவித்துள்ளார்.
“நாட்டின் ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும் அவர்களால், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாத நிலையை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் காவல்துறையினரை குற்றவாளிகளை விட மோசமாக நடத்துகிறீர்கள்” என்று கூறியுள்ளார்.
ஐபிசிஎம்சி குறித்து ஆய்வு செய்வதற்கு, 1 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் வான் ஜூனைடி கோரியிருந்தார்.
அந்த ஆய்வு முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஐபிசிஎம்சி சட்டத்தின் அனைத்து கொள்கைகளையும் மீறுவதாக உள்ளது. மொத்தத்தில் அது ஒரு மோசமான சட்டம் என்று வான் ஜுனைடி பதிலளித்துள்ளார்.