சென்னை, ஜூலை 16- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய ஒத்துழைப்பு நல்கியமைக்கு தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த தொலைபேசி உரையாடலின்போது, செபி நிறுவன அதிகாரிகளுடனும், மத்திய அரசு அதிகாரிகளுடனும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேற்று (15.7.2013) மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும், பிரதமர் தலையீட்டின் பேரில், அந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் திருப்திகரமான உடன்பாடு ஏற்பட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்த உடன்பாட்டினைத் தொடர்ந்துதான் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், இந்த வேண்டுகோளினை ஏற்று தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புவார்கள் என்று தான் நம்புவதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமரிடம் தெரிவித்தார்.
அப்போது, இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்டதோடு, தான் எப்போதும் மாநில அரசுடன் இணக்கமான உறவை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.