Home நாடு செரண்டா தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற சேவியர் வேண்டுகோள்

செரண்டா தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற சேவியர் வேண்டுகோள்

634
0
SHARE
Ad

Xavier-Jeyakumar-Sliderபிப்ரவரி 6 – “கடந்த 4-2-2012 தமிழ்ப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள  செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் குறித்த செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த உலுசிலாங்கூர்  இடைத்  தேர்தலின் போது 2010 ஏப்ரல் 24ந் தேதி அங்கு வருகை புரிந்து வழங்கிச் சென்ற பிரதமரின் வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. வெற்று வாக்குறுதிகளை வழங்கி அங்குள்ள மக்களை ஏமாற்றக்கூடாது” என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் (படம்) கூறினார்.

இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

“கடந்த  ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதமர் வழங்கிய மேலும்  6 புதிய தமிழ்ப் பள்ளிகளுக்கான வாக்குறுதியும், நிறைவேற்றப்படவில்லை.  அதே போன்று சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு  4 மாடி கட்டிடங்கள் மூன்று கட்டிக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியும்  இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது ஏமாற்றமளிப்பதாகவுள்ளது.  தமிழ்ப்பள்ளிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஜஞ்சி டிதெத்தாப்பி என்று  மெர்டேக்கா  சுலோகத்தையும் கூறி இந்திய சமுதாயத்தை ஏமாற்றுவதே அம்னோ தலைவர்களின் பாணியாகப் போய் விட்டது.”

#TamilSchoolmychoice

தமிழ்ப் பள்ளிகளின் அவலம்- ஆனால் மில்லியன் கணக்கில் செலவழித்து பொங்கல் விழா…

“அதனால் நமது குழந்தைகள் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கல்வி கற்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். சான்றாகக் கடந்த வாரம் சிமிஞ்சே டோமினியன் தமிழ்ப்பள்ளி கூரை சரிந்து விழுந்ததை மக்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் ஆனந்தமாய்ப் பல மில்லியனுக்குப் பொங்கல் வைப்பவர்கள் கண்களுக்குத்  தமிழ்ப்பள்ளிகளின் அவல நிலை கண்ணுக்குத் தெரிவதில்லை”.

” தேசிய முன்னணி அரசுக்கு இந்தியர்களின் வாக்கு சீட்டுகளின்  அவசியத்தை  உணர்ந்துள்ள அளவுக்கு  இந்தியர்களுக்கு  அளிக்கும் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை. அப்படி  அவர்கள் உணர்ந்திருந்தால் 2010 ம் ஆண்டு செரண்டா தமிழ்ப்பள்ளிக்கு அளித்த வாக்குறுதி குறித்துச் சம்பந்தப்பட்ட பள்ளி வாரியத்தை அழைத்துப் பிரதமர் பேசியிருக்க வேண்டும். அதை விடுத்து  அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் பூண்ட வேளையில் கூட  அதனைக் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது.”

“அன்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டவர்களின்   உயிருக்கு ஏதாகிலும் நடந்திருந்தால் இந்தியச் சமுதாயம் பிரதமரையும் அம்னோவையும் எளிதில் மன்னித்திருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இன்று வரை அந்த தமிழ்ப்பள்ளியைக் கட்ட  மத்திய அரசாங்கம் ஏதும் செய்யாமலிருப்பது  உண்ணா விரதமிருந்த குழுவினரை மட்டுமின்றி  இந்தியச் சமுதாயத்தை  அவமதிக்கும் செயலாக இருக்கிறது”

“அதே வேளையில்  மற்றவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கான வேலைகளை செய்யவும் கல்வி இலாக்கா பல வகைகளில் தடையாக இருக்கிறது. செரண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில்  பள்ளி வாரியத்திற்கு உதவ மாநில அரசு தயாராக இருக்கிறது.  அந்த வாரியத்துக்கு  பள்ளி நிலம் மற்றும் மேல் விவரங்கள்  கேட்டு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு பள்ளியைக் கட்ட ஆர்வம் காட்டாவிடில் மாநில  அரசின் உதவியைப் பெற்றுக் கொள்ள அவர்கள் முன் வரவேண்டும்.”

-இவ்வாறு சேவியர் ஜெயக்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.